tamilnadu

img

மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைப்பு

சென்னை,மார்ச் 14- சென்னை: தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மழலையர் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதால் தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிலையில், சனிக்கிழமை  அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன்  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி, ப்ரீகேஜி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் ப்ரீகேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் மார்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மேற்கண்ட வகுப்புகளுக்கு மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது சார்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிக் கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார். பள்ளிக் கல்வித் துறையின் இந்த அறிவிப்பு வெளியானதுமே, பள்ளிகள், மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு விடுமுறை தொடர்பாக குறுந்தகவல் அனுப்பிவிட்ட நிலையில், தற்போது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.