tamilnadu

img

பொது போக்குவரத்திற்கு தொடரும் தடை

சென்னை, ஏப்.2  கொரோனா அச்சுறுத்தல் இன்னும் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், சனிக்கிழமையன்று   ஊரடங்கு தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மே 4 ஆம் தேதி முதல் மே  17 நள்ளிரவு 12 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது:-

 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போது உள்ள நடை முறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர –மற்ற இடங்களில்   கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப் படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

  சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் சூழ்நிலைக் கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.

ஹோட்டல்கள் 

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம். உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, பார்சல் மட்டும் வழங்கலாம்.

தனிக்கடைகளுக்கு அனுமதி

 அனைத்து தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பிளம்பர், எலெக்ட்ரிசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள் வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், மாநகராட்சி ஆணையர், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர். 

50 சதவிகித பணியாளர்கள்

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்படும். பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை  நிறுவனங்களை 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் (ஊரகம், நகரம்) 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். நகரப் பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். மின்னணு வன்பொருள் (ஹார்டுவேர்) உற்பத்தி: 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலை கள் (ஷிஃப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன்) 50  சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப் படும். நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள்கள் உருவாக்கம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, 30 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளர்கள், குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.நகர்புறங்களில் கட்டுமானப் பணிகள் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும்; பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும்.

 பிளம்பர், எலெக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட  ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படு வர்.  மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.  அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான, சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன விற்பனைக் கடைகள்: காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தவித தடையும் இல்லை.  மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள்,  மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்கள்

கிராமப்புரங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்பபடும்.  உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் சூழ்நிலைக்கேற்ப அனுமதிக்கலாம்.

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம்.  நகரப் பகுதிகளில் பணியாளர்களை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் பிரத்யேக பேருந்துகள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும். 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும். 

கல்வி நிலையங்கள் தொடர்ந்து மூடல்

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மறு உத்தரவு வரை மூடப்பட்டிருக்கும்  வழிபாட்டுத்  தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைநீடிக்கும். திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள். அனைத்து வகையான சமய,  சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

 பொது மக்களுக்கான விமான, ரயில், பொது பேருந்து போக்குவரத்து. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா. மெட்ரோ  ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்கு வரத்து.  மாநிலங்களுக்கு இடையேயான பொது மக்கள் போக்கு வரத்து.  தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் அனுமதிப்படமாட்டாது.

இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும். அரசு வழங்கியுள்ள இந்த நடைமுறைகளை பின்பற்றி, மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர ஆணையர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து,தொழிற்சாலைகளுக்கு தக்க அனுமதி வழங்கி, 6.5.2020 முதல் தொழிற்சாலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

நோய்த் தொற்றின் பரவலை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. நோய்த் தொற்று குறையக் குறைய, தமிழ்நாடு அரசு மேலும் பல தளர்வுகளை அறிவிக்கும். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள், முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.