தமிழக அரசு அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை,பிப்.4- தமிழ்நாட்டில், மாநில பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத் திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்தி பலவந்தமாக மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி ஆகியோர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டை யனை கடந்த மாதம் 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்க தாகும். இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் செவ்வாயன்று (பிப்.4) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளி யிட்டார்.
அதில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர் களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது; இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற கோரிக்கை களை, அரசு கவனமுடன் பரிசீலித்து, 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறி விப்பு அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத் திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார்.
தொடர்போராட்டத்தால் பின் வாங்கிய அரசு
ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ளது இந்திய மாணவர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு, ஐந்து, எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத் தேர்வு என அறிவித்தது. இது அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற லட்சி யத்தை உடைக்கும் விதமாக அமைந்தது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே தமிழகத்தில் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு தயாரானது.
பாஜக அரசுக்கு ஆதரவாக ஐந்து, எட்டாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு அறிவித்ததன் மூலம் இடைநிற்றல் அதிகமாகும். மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். குழந்தைத் தொழி லாளர்கள் தமிழகத்தில் அதிக அளவில் உருவாக வாய்ப்புள்ளது. எதிர்கால சமூகம் கல்வியறிவற்ற சமூகமாக மாறும் நிலை ஏற்படும். இந்தத் தேர்வுக்கு எதிராக பல்வேறு ஜனநாயக அமைப்பு கள், கல்வியாளர்களின் போராட்டத்தின் காரண மாக தமிழக அரசு பின் வாங்கியுள்ளது. மேலும் இது, குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்திற்கும், அறிவியலுக்கும் உளவியலுக்கும் எதிரான செயல் என இந்திய மாணவர் சங்கம் அரசிற்கு சுட்டிக்காட்டி யிருந்தது.
பொதுத்தேர்விற்கு எதிராக மாணவர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தியது. பிப்.5-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், தமிழக அரசு ஐந்து, எட்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து என அறிவித்துள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் வரவேற்கிறது. அதேநேரத்தில் இதை தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும். பள்ளிக் கல்விக்கான நிதி குறைப்பு மத்திய பட்ஜெட்டில் கல்விக்கு பத்து சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீத நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டுமென்ற கோதாரி கமிஷன் பரிந்துரைகளை பாஜக அரசு அமல்படுத்தவில்லை. மாறாக பட்ஜெட்டில் உயர் கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளது. பள்ளிக் கல்விக்கான நிதியை குறைந்துள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். கல்வியில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது. கூடுதலான நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டுமென்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
தமிழகத்தில் 5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அண்மையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தேர்வுகளுக்கான அட்டவணையும் கூட வெளியானது.
5 மற்றும் 8 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை அறிவிப்பில் உள்ள சில ஷரத்துக்களை முன்னிறுத்தி 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய பொதுத்தேர்வு உளவியல் ரீதியான பாதிப்புகளை உருவாக்கும்; மாணவர்களின் இடைநிற்றலுக்கு இத்தகைய அறிவிப்பே காரணமாகிவிடும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும், 2009ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்திற்கு புறம்பானது என்பதாலும் இந்த அறிவிப்பை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது. இதுபோல் மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுத்தேர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.
இந்நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை ரத்து செய்வது என தமிழக அரசு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்த பொதுத் தேர்வு ரத்து அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் ஏற்பட்ட மன அழுத்த உணர்வையும், அச்ச உணர்வையும் அகற்ற உதவிடும்.
எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு மக்களிடையேயும், மாணவர்களிடையேயும், கல்வியாளர்கள் மத்தியிலும் பதற்ற நிலைமையை உருவாக்கக் கூடாது எனவும், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் நிலைபாட்டை முற்றாக கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென்று குரலெழுப்பிய, போராடிய அனைத்து அமைப்புகளுக்கும், மாணவர் அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.
சிபிஎம் மாநில செயற்குழு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திலிருந்து...