tamilnadu

img

பிப்ரவரியில் வேலையின்மை 7.78 சதவீதமாக உயர்வு - சிஎம்ஐஇ தகவல்

பிப்ரவரி மாதத்தில், வேலையின்மை 7.78 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (சிஎம்ஐஇ) தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறியீடுகளில் மிக முக்கிய ஒன்றான ஜிடிபி, கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் 2019 வரையான காலாண்டில் 4.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இது கடந்த, ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி சரிவாகும். இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான சிஎம்ஐஇ, வேலையின்மை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் வேலையின்மையும் 7.78 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கிராமப்புற பகுதிகளில், பிப்ரவரி மாதத்தில் 7.37 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகர பகுதிகளில், பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை 8.65 சதவீதமாக உள்ளது. நாட்டில் வேலையின்மை, கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் 7.23 சதவீதமும், டிசம்பரில் 7.60 சதவீதமும், ஜனவரி 2020-ல் 7.16 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.