பெங்களூரு:
பெங்களூருவைச் சேர்ந்தவர் ஆகார் படேல். மனித உரிமை செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமான இவர், கடந்த 20 ஆண்டுகளாக மனிதஉரிமைக் களத்தில் செயல்பட்டு வருகிறார். “ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்” அமைப்பின் இந்திய கிளைக்கு தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே 31 அன்று அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கறுப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகார் படேல் பதிவிட்டார்.அதில், ‘’அமெரிக்காவில் கறுப்பின மக்கள் தங்களின்உரிமைக்காகப் போராடுவதைப் போல இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் போராட வேண்டும். போராட்டமே உரிமையைப் பெற்றுதரும்’’ எனப் பதிவிட்டு இருந் தார். இதனை பலர் ஆதரித்த நிலையில், பாஜக மற்றும் சங்-பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஜே.சி.நகர் காவல்நிலைய ஆய்வாளர் நாகராஜ்அளித்த புகாரின் பேரில் ஆகார் படேல் மீது மக்களைப்போராடத் தூண்டியதாகவும், பொது அமைதியை சீர குலைக்க முயன்றதாகவும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெங்களூரு போலீசார் பாஜக அரசின்கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். “ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்” உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன.