பெங்களூரு;
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் (48) பணியிடமாற் றம் செய்யப்பட்டதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதுடன், அதிகாரிமணிவண்ணனுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த 400-க்கும் மேற் பட்ட தன்னார்வலர்கள் பணி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில தொழிலாளர் நலத்துறையின் முதன்மைச் செயலாளராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர், ஐஏஎஸ்அதிகாரி பி. மணிவண்ணன். ஒரு அதிகாரி, அரசின் கொள்கை முடிவுகளைத்தான் நடைமுறைப்படுத்த முடியும்என்றாலும், மணிவண்ணனைப் பொறுத்தவரை, தொழிலாளர்கள் நலனில் தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டவர் என்று கூறப்படுகிறது.அந்த வகையில், தற்போது கொரோனாஊரடங்கால் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில், கூடுதல் அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.துறைவாரியான பணியையும் தாண்டி,வாட்ஸ் ஆப், டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் மூலம் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை இலவசமாக கொண்டுசேர்த்து வந்துள்ளார்.
இவ்வாறு முழுவீச்சில் மக்கள்பணி ஆற்றிக் கொண்டிருந்த நேரத்தில்தான், 2 நாட்களுக்கு முன்பு, அவரை எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசு திடீரென பணியிலிருந்து விடுவித்துள்ளது. வேறு பணியையும் ஒதுக்காமல் பழிவாங்கியுள்ளது.இது கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையைக்கிளப்பியுள்ளது. சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு அதிகாரியை, இரவோடு இரவாக இடமாற்றம் செய்தது, தொழிலாளர் துறை ஊழியர்கள்மட்டுமன்றி, தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எடியூரப்பா அரசின் செயலுக்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிவண்ணன் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு, தொழிலதிபர்களின் நெருக்கடியே காரணம் என்றும் அவர்கள் குற்றச் சாட்டு எழுப்பியுள்ளனர்.ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு எவ்வித முன் அறிவிப்பும் செய்யாமல் ஊதியத்தை குறைத் துள்ளன. பல தொழிலாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக புகார்கள் வந்த நிலையில். அவற்றின் மீது ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த முதலாளிகள்தான், தங்களின் ஏவல் முதல்வராக இருக்கும் எடியூரப்பா மூலம் ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணனை இடமாற்றம் செய்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல தொழிற்துறை அமைச்சர்ஷிவராம் ஹெப்பார், அரசின் நிவாரண பொருட்களை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மூலமே மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய போது. அதனை அதிகாரிமணிவண்ணன் ஏற்கவில்லை என்பதும் இடமாற்றத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில்தான் மணிவண்ணன் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக கூறி, கர்நாடகத்தில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அண்மையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு, ரயில்களில் செல்வதாக இருந்தனர்.
ஆனால், அவர்களை அனுப்பி விட்டால், எங்களுக்கு குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள் என்று கர்நாடக ரியல் எஸ்டேட் முதலாளிகள் முதல்வர் எடியூரப்பாவிடம் ஓட்டமாக ஓடி முறையிட்டனர். உங்களுக்காகத்தானே நான் இருக்கிறேன் என்று எடியூரப்பாவும் தனது முதலாளிகளைக் குளிர்விக்கும் வகையில், அந்த ரயிலையே ரத்து செய்தார். அதன்தொடர்ச்சியாகவே ஐஏஎஸ் அதிகாரியையும் பணியிலிருந்து நீக்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.