சீன ஓபன் பேட்மிண்டன்
சீனாவின் முக்கிய நகரான புஸ்ஹாவில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி வெள்ளியன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீனாவின் லி ஜூன் - யு ஜென் ஜோடியை எதிர் கொண்டது. தொடக்கம் முதலே அதிரடி பாணியில் களமிறங்கிய இந்திய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் சீன ஜோடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ராங்கி - சிராக் ஜோடி அரையிறுதியில் இந்தோனேசியா வின் மார்கஸ் பெர்னால்டி - கெவின் சஞ்சயா ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த ஜோடி தரவரிசையில் முதல் நிலை அந்தஸ்தில் இருப்பதால் இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது சற்று சிரமமான காரியம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தோனேசிய ஜோடி தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என ஆருடம் கூற முடியாது. காரணம் நடப்பு சீசனில் ஜோடி ராங்கி - சிராக் ஜோடி அதிரடியாக விளையாடி வருவதால் யார் இறுதிக்கு முன்னேறுவார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் போன்ற பிரிவுகளில் இந்திய வீரர்- வீராங்கனைகள் படுதோல்வியைச் சுவை பார்த்து தாய்நாடு திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.