வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம்
மதுரை, மே 28- நீதிமன்ற வளாகத்தில் ஆர்எஸ்எஸ் மருத்துவ முகாம் நடத்தியதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மாநிலத் தலைவர் ஏ. கோதண்டம் மாநில செயல்தலைவர் என். முத்து அமுதநாதன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:- விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் , திண்டிவனம் ஆகிய ஊர்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு மருத்துவ முகாம் நடத்த அனுமதி அளித்துள்ளதை அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய மருத்துவ முகாம்களில் நீதிபதிகள் பங்கேற்றது சரியான நடைமுறை அல்ல. ஆர்எஸ்எஸ் மதவெறியுடன் செயல்படும் வகுப்புவாத அமைப்பு. அரசியல் சாசனத்தின்படி எவ்வித பாகுபாடின்றி செயல்பட வேண்டிய நீதிபதிகள் மதவெறி அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சட்டப்படி தவறான நிகழ்வு ஆகும். எதிர்காலத்தில் ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறி அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு நீதிமன்ற வளாகத்தில் அனுமதி வழங்கக்கூடாது என உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.