tamilnadu

img

வெள்ளத் தடுப்பு நிதியில் கட்காரி குடும்ப சுற்றுலா

கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகியுள்ளனர். குறிப்பாக, இங்குள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில், 5 காண்டாமிருகங்கள் உட்பட 20 விலங்குகள் மரணம் அடைந்துள்ளன.

இவை ஒருபுறமிருக்க, இதுபோன்று வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவே, கடந்த 2017-ஆம் ஆண்டு, ரூ. 1 கோடி நிதி பிரம்புத்திரா வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா வாரியமும் இதுதொடர்பாக பணிகளைத் திட்டமிட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியை, உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவுகளில் ஒன்றான மஜூலியில் நடத்தியுள்ளது. ஆனால், இதில்தான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. வெள்ளத் தடுப்பு கட்டுமானப் பணிகளைத் துவக்கி வைப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வந்துள்ளார். அவர் மட்டும் வராமல் குடும்பத்துடன் வந்துள்ளார். அதுமட்டுமல்ல, மஜூலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அசாமில் நான்கு நாட்கள் குடும்பத்துடன் சாவகாசமாக சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இந்த நான்கு நாட்களும், கட்காரிக்கான தனி விமானம், உணவு ஏற்பாடு என்று மொத்தம் 62 லட்சத்து 96 ஆயிரத்து 652 ரூபாய் செலவாகி உள்ளது. இந்த பணத்தை பிரம்மபுத்திரா வாரியமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஒதுக்கீடாகப் பெறப்பட்ட ரூ. 1 கோடி நிதியில், ரூ. 63 லட்சம் அமைச்சரின் சுற்றுலாவுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள 27 லட்சம் ரூபாயில்தான் கட்டுமானங்கள் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், 2 ஆண்டுகளாகியும், பிரம்மபுத்திரா வாரியத்தின் வெள்ளத்தடுப்பு கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. சொல்லப்போனால் வேலையே இன்னும் தொடங்கப்படவில்லை. வெள்ளம் மற்றும் ஆற்றின் நில அரிப்பைத் தடுக்கும் கட்டுமானங்களை ஏற்படுத்துவது குறித்து சர்வே நடத்தப்பட்டதோடு, அனைத்தும் நின்று விட்டன.விளைவு, பிரம்மபுத்திரா வெள்ளத்திற்கு 20 உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட அறிக்கையின் மூலமே இதுதொடர்பான உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.