சுதந்திர இந்தியாவில் 15.12.47 முதல் 22.12.47 வரை எட்டு நாட்கள் அன்றைய என்ஜிஓ யூனியன் தலைவர் ஜெகதீசன் தலைமையில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அவ்வேலை நிறுத்தத்தை உடைக்க கடுமையான அடக்கு
முறைகள் ஊழியர்கள் மீது அன்றைய ஆளும் ஆட்சியினால் ஏவிவிடப்பட்டது. அவர்களை பாதுகாக்க அவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கியது. அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைவரான எம்.ஆர்.வெங்கட்ராமன் கைதானார். அன்றிலிருந்து இன்றுவரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் இடதுசாரிகள் பெரும் பாதுகாப்பாக விளங்கிவருகின்றனர். அதுபோன்று மத்தியில் சரண்சிங் அரசு பதவி ஏற்றபோது இடதுசாரிகளின் ஆதரவோடு அந்த ஆட்சி நடந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற ரயில்வே வேலை நிறுத்தத்தில் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளாகிபல்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டன. வேலை நீக்கத்திலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தனர். ரிசர்வ் வங்கியில் சங்கம் செயல்பட முடியாமல் கருப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் விளைவாக பணிநீக்கம் உட்பட பல்வேறு தண்டனைகளுக்கு வங்கி ஊழி
யர்கள் உள்ளாகியிருந்தனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது அன்று மேலோங்கி இருந்தது. இதனை அமல்படுத்த இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தமே முதல் முறையாக மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது, பழிவாங்கும் நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டன.
40 சதவீத ஊதிய உயர்வு
தொடர்ந்து இன்று அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கணிசமான சம்பளமும் ஓய்வூதியமும் பெறுவதற்கு மூலகாரணமே மத்தியில் அமைந்த குஜ்ரால்அரசே. இடதுசாரிகள் ஆதரவோடு நடைபெற்ற அந்த அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராகவும், சதுராணன் மிஸ்ரா வேளாண்மை துறை அமைச்சராகவும் பதவிவகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரித்தது. ஐந்தாவது ஊதியக்குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் இருந்தார். அந்த மத்திய ஐந்தாவது ஊதியக்குழு தனது பரிந்துரையை மத்திய அரசிடம் அளித்தது. அதில் 20 சதவிகிதம் ஊதிய உயர்வு, 30 சதவிகிதம் ஆட்குறைப்பு பிரதானமானது. இதனை அமல்படுத்த நிதி அமைச்சகம் வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசில் இருந்த இரு இடதுசாரி அமைச்சர்களும், வெளியிலிருந்து ஆதரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். எனவே பிரதமமந்திரி வேறுவழியின்றி, நிதி அமைச்சர் இன்றி இது குறித்து பரிசீலிக்க அமைச்சர்கள் இந்திரஜித் குப்தா, சதுராணன் மிஸ்ரா,சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழு சிறப்பான சம்பள உயர்வை ஊழியர்களுக்கு அளித்தது. 40சதவிகித ஊதிய உயர்வுடன் ஆட்குறைப்பையும் கைவிட்டது. அதற்கு முன்பு மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் கேட்டு நடந்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மத்திய அரசு அமல்படுத்திய ஊதியக்குழுவினால் மத்திய அரசு ஊழியருக்கும் மாநில அரசு ஊழியருக்கும் மிகப்பெரிய அளவில் சம்பளத்தில், ஓய்வூதியத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. இதனை எதிர்த்து தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இணைந்து 1988ல் ஜாக்டி -அரசு ஊழியர் இயக்கங்களின் பேரமைப்பு சார்பில்நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர்களை ஆட்சியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கினர். பல்லாயிரக்கணக்கில் ஊழியர்கள் கைதாகி சிறையிலடைக்கப்பட்டனர்.
இப்போராட்டத்திலும் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகளும் அதன் வெகுஜன அமைப்புகளும் கலந்துகொண்டு குதிரைப் படையை எதிர்கொண்டனர். கடுமையான தடியடி, ரத்தம் சிந்தினர். அதன் விளைவுதான் மத்திய அரசு ஊழியருக்கு இணையான சம்பளம், ஓய்வூதியம் பெறப்பட்டது. இந்த ஓய்வூதியத்தை ஒரு ‘கொடுபடா ஊதியம்’ எனவும், இது அரசின் கருணையினால் தரப்படுவதல்ல எனவும் 17.12.1982ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு உறுதி செய்தது. சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதி டி.எஸ்.நகராவின் வழக்கில் இவ்வுன்னதமான தீர்ப்பை வழங்கினார்கள். இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பறிக்க குறுகிய காலம் ஆட்சிபுரிந்த பிரதமர் வாஜ்பாய் காலத்திலிருந்து முயற்சி நடந்தது. அதை எதிர்த்து இடதுசாரி எம்.பிக்கள் கடுமையாகப் போராடினர். ஆனாலும் அமலாகி விட்டது. இதனை எதிர்த்து கடுமையான வேலை நிறுத்தத்திற்கு 2003 ஜூலை 2ஆம் தேதியிலிருந்து தமிழக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தயாரானபோது டெஸ்மாவை அமல்படுத்தி, உலகமே அதிரும் விதத்தில் தமிழக அதிமுக அரசு தனது ஊழியர்களை ஒடுக்க முற்பட்டது. 1,72,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நமக்கு ஆதரவாக வழக்குமன்றம் சென்றன. எல்பிஎப், ஏஐடியுசி, சிஐடியு நீதிமன்றம் சென்றன. சிஐடியு மனு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. டி.கே.ரங்கராஜன் எதிர் தமிழக அரசு வழக்கில் வெற்றி பெற்று 1,42,000 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர முடிந்தது.
புதிய பென்சன் திட்டம்
தொடர்ந்து புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து 2016லிருந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராடியபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் புதிய பென்சன் திட்டத்தை திரும்பப்பெற சாந்த ஷீலாநாயர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து டி.எஸ்.சீதர் தலைமையிலும் தொடரப்பட்டது. அதன் அறிக்கையை அரசு பெற்றும் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து வேறு வழியின்றி ஜேக்டோ-ஜியோவின் வேலை நிறுத்தம், நீதிமன்ற தலையீடு, ஆயிரக்கணக்கில் கைது, 17(b) குற்றச்சாட்டு, தற்காலிகவேலை நீக்கம், மாறுதல்கள் இவை அனைத்தையும் எதிர்கொண்டு நடந்தது. தீர்க்க வேண்டியபிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. பல்வேறு விதமானபழிவாங்கல் தொடர்ந்தது. இதன் விளைவாக தமிழக எடப்பாடி அரசின் மீது அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கோபம் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. இதோ நாடாளுமன்றத் தேர்தலும், தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல்களும் கண்முன்னே எதிர்நிற்கின்றது. யார் நம் பக்கம் நின்றார்கள். யார்நம்மை கிள்ளுக்கீரையாக எதிர்கொண்டார்கள் என்பதை எண்ணிப்பார்த்து, பகை முடிக்க வேண்டிய வேண்டிய நேரம் இது.
கட்டுரையாளர் : மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம்