“சாதிப்பதற்கு வசதி மட்டும் போதுமானதல்ல, விடாமுயற்சியும், ஆர்வமும் போதும்”- என 7வது முறையாக நிரூபித்துள்ளனர் தில்லையாடியில் உள்ள தியாகி.வள்ளியம்மை நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள். நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள தில்லையாடியில் உள்ள தியாகி.வள்ளியம்மையின் பெயரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏழை,எளிய தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சுற்றியுள்ள கிராமங்களான காட்டுச்சேரி, துடரிப்பேட்டை, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்து கல்வி பயில்கின்றனர். மாணவர்களின் தனி திறமைகளை அடையாளங்கண்டு, உற்சாகப்படுத்தி அவர்களை சாதிக்க வைப்பதில் மிகச் சிறந்த ஆசிரியர்களை கொண்ட இப்பள்ளியின் தொடர் சாதனையை சுற்றியுள்ள பள்ளிகளால் இதுவரை முறியடிக்க முடியாமல் உள்ளது ஆச்சரியமாகவே உள்ளது.
கோ கோ போட்டியில் தொடர்ந்து சாதனை படைக்கும் இப்பள்ளி மாணவர்கள் அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். 6 முறையாக தொடர்ந்து மாநில போட்டிக்கு சென்ற இப்பள்ளி மாணவர்கள் 7 வது முறையாக தேர்வு பெற்றதை அறிந்த பொதுமக்கள், பெற்றோர்கள் தலைமையாசிரியர் கருணாநிதி, உடற்கல்வி ஆசிரியர் பாக்யநாதன், சாதனை படைத்த மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கோ கோ மட்டுமன்றி தடகள விளையாட்டுகளிலும் பல்வேறு பரிசுகளைப் பெற்று வருகின்ற இப்பள்ளிக்கு இதுவரை விளையாட்டு மைதானத்தை கல்வித்துறை அமைத்துத் தரவில்லை என்று குற்றம் சாட்டியதோடு, விளையாட்டு உபகரணங்களையும் போதுமான அளவில் வழங்கவில்லை என கூறுகின்றனர். பள்ளிக்கு எதிரேயுள்ள கரடு முரடான திடலில் பயிற்சிப் பெற்றே மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறுகின்ற மாணவர்களுக்கு தமிழக கல்வித்துறை சொந்தமாக மைதானம் அமைத்து விளையாட்டு உபகரணங்களை வழங்கி உற்சாகப்படுத்தினால் இன்னும் அதிகமான சாதனையை நிச்சயம் படைப்பார்கள் என பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். “சாதனை படைப்பதற்கு மாணவர்களும், பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியர்களும் தயாராகவே இருக்கின்றனர். அதற்கான கட்டமைப்பு வசதிகளை அரசு பள்ளிகளில் தமிழக கல்வித்துறையும், அரசும் அமைத்து தந்தால்தான் சாத்தியமாகும்.”
- செ.ஜான்சன், தரங்கம்பாடி