அமராவதி:
“சமூக ரீதியாக அனைவருக்குமான அமைச்சரவை” என்ற முழக்கத்திற்கு ஏற்ப ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 25 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிற்படுத்தப்பட்டப் பிரிவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சராக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்டப்பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கும், மலைவாழ் பிரிவைச் சேர்ந்த மற்றும் முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தலா ஒருவருக்கும் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.கபு மற்றும் ரெட்டி சாதியினருக்கு தலா 4 அமைச்சரவை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்திய கம்மா சாதிக்கு இம்முறை ஒரேயொரு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் ஜெகன்மோகன்.
சத்ரியர் மற்றும் வைஸ்யர்கள் சாதிப்பிரிவினருக்கு தலா 1 இடம் அமைச்சர் பதவியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைநகர் அமராவதி வேலகபுடியில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.முதல்வரையும் சேர்த்து தற்போது 26 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இதில் 3 பெண் உறுப்பினர்கள் அடங்குவார்கள்.வெங்கட்ரமண ராவ் மீனவர் பிரிவைச் சேர்ந்தவர். சமீப சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் தோல்வியடைந்தார், இருப்பினும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.ஜெகனுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான ஜி.ஸ்ரீகாந்த் ரெட்டி சாதிக் கணக்கீடுகளினால் அமைச்சரவையில் இடம்பெற முடியாமல் போனது, ஆனால் அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.