கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற வாசகத்தை ஆஸ்கர் விருது பெற்ற பெண் இயக்குநர் ஜூலியா ரீச்சர்ட் விருது விழாவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா துவங்கியது. விழாவில் முன்னணி திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அதன்படி சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது ”அமெரிக்கன் ஃபேக்டரி” (American Factory) என்ற ஆவணப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படம், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா தயாரிப்பில் வெளிவந்துள்ளது.
ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட இந்த படத்தை இயக்கிய மூன்று இயக்குநர்களில் ஒருவரான ஜூலியா ரீச்சர்ட் மேடையில் பேசியபோது, “உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபட்டால், அனைத்து விஷயங்களும் சிறப்பாக வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார். கடந்த 1848-ல் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாசகத்தை அவர் மேற்கோள் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.