tamilnadu

img

அமெரிக்காவில் இன்னும் தீரா நோயாக இருக்கும் இனவெறி

நவீன இந்தியாவின் தந்தை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் 128-வது பிறந்தநாள் விழா, "அரச-சோசலிசம் பற்றிய அம்பேத்கரின் நிலைப்பாடு" என்ற தலைப்பில் கடந்த ஏப்ரல் 13 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இவ்விழாவை அம்பேத்கர்-கிங் படிப்பு வட்டம், அசோசியேசன் ஃபார் இந்தியா டெவலப்மென்ட் (Association for India Development - Bay Area), சான் ஓசே அமைதி மற்றும் நீதி மையம் (San Jose Peace and Justice Center) மற்றும் இந்தியாவின் சிறுபான்மை யினருக்கான அமைப்பு (Organization For Minorities of India) ஆகிய அமைப்புகள் கூட்டாக இணைந்து நடத்தின. இந்த விழாவில் அரச சோசலிசம் (state socialism) கொள்கையின் மீதான டாக்டர். அம்பேத்கரின் நிலைப்பாட்டை முன்வைத்து, பல்வேறு சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றன. விழாவின் தொடக்கத்தில், பல நூற்றுக்கணக்கான அப்பாவி இந்திய மக்கள் பிரிட்டிஷாரால் கொல்லப்பட்ட “ஜாலியன் வாலாபாக் படுகொலை”யின் 100-வது ஆண்டை நினைவு கூரும் வகையில் கூட்டத்தினர் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி அஞ்சலி செலுத்தினர். 


தனியார்துறையில் இடஒதுக்கீடு அவசர தேவை


சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவரான ஹார்வர்டு பல்கலைக் கழகமுனைவர் சூரஜ் யெங்தே அம்பேத்கரின் அரச சோசலிசம் பற்றிய விவரங்களைக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத் தார். அம்பேத்கரின் அரச சோசலிசம் எவ்வாறு அவரின் காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் பொருந்தும் என்பதை ஒப்பிட்டுப் பேசினார். சுதந்திரம் அடைந்த பிறகு, நிலத்தில் வேலை செய்யும் அனைத்து சாதியினருக்கும் நிலத்தை சமமாக பிரித்துக் கொடுத்திருந்தால், சாதிய பாகுபாடு மற்றும் சாதிய வன்முறைகள் நீண்ட காலத்திற்கு முன்பே ஒழிந்திருக்கும் என்றும் அவர் கூறினார். அம்பேத்கரின் அரச சோசலிசம் கொள்கை எவ்வாறு தொழிலாளர் களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம், அது எப்படி அவர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் இருந்தது என்றும் விளக்கினார். தலித்துகளின் மீதான சமூக பாகுபாடு உயர் சாதியினர் மீதான அவர்களின் பொருளாதார சார்புடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தது. தலித்துகள் கிராமப்புறங்களில் நிலத்திற்காக, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்புக்காக உயர் சாதியினரை நம்பி இருந்தார்கள். சாதி ஒழிப்பு என்பது நில ஆதிக்கத்தை அழிப்பதற்கும், அனைத்து நிலங் களையும் எல்லா சாதிகளுக்கும் பிரித்துக் கொடுப்பதற்கும் ஒப்பானதுஎன்று அவர் கூறினார். தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது வளர்ந்து வரும் இந்த திறந்த வெளி பொருளாதார காலக் கட்டத்தில் சமூகநீதிக்கான ஒரு அவசர தேவை என்றும்முனைவர் சூரஜ் யென்ஜ் குறிப்பிட்டார்.


தொழிலாளர் ஒற்றுமையை தடுக்கும் இனவெறி


கலிஃபோர்னியா சாண்டா கிளாரா மாவட்டத்தின் வீட்டு வசதி வாரியக் கூட்டுறவு அமைப்பின் தலைவர்சாண்டி பெர்ரி, அமெரிக்காவில் நிலவிய இனவெறி, இனப் பாகுபாடு வரலாறு மற்றும் அதன் தற்போதைய வெளிப்பாடு ஆகியவற்றை அனை வரின் கண்கள் முன்பும் கொண்டு வந்து நிறுத்தினார். அமெரிக்க இனவெறி என்பது அமெரிக்க முதலாளித்துவத்தின் தயாரிப்பு என்றும் அவர் கூறினார். அரசியல் மற்றும் பொருளாதார முனைகளில் மனிதர்களை பிரித்து ஆள இனவெறி பயன்கடுத்தப்பட்டது. தொழிலாளர்களுக்கு இடையில் ஒற்றுமையைத் தடுக்கும்ஒரு கருவியாக இனவாதத்தை அமெரிக்க நாட்டை உருவாக்கியதலைவர்கள் பயன்படுத்தியிருந் தார்கள். வரலாற்று உரைகள் மற்றும் விலைமதிப்பற்ற ஆவணங்களை வைத்திருந்த “ஹைலேன்டர் ஆய்வு மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பை கடந்த இரண்டு வாரங் களுக்கு முன்னர் தான் வெள்ளை மேலாதிக்கவாத குழுவினர் தீக்கிரையாக்கினர் என்பது பற்றி அவர் குறிப்பிட்டு, அமெரிக்காவில் இன்னும்கூட இன வெறி தீராத நோயாக இருக்கின்றது என்பதை வலியுறுத்திக் கூறினார். மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ரோசா பார்க்ஸ் மற்றும் ஜான் லூயிஸ் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் இந்த மையத்தில் தான் சமூகநீதி மற்றும் அதைச் சார்ந்த அரசியல் பயிற்சிகள் பயிற்று விக்கப்பட்டனர். இந்த மையம் 1990 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றது. 1800 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பொருளாதார விரிவாக்கத்தால் வலுவூட்டப்பட்ட நிறவெறி இன்றும் தொடர்கின்றது. தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையினால் மட்டுமே இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை கார்ல் மார்க்சின்மேற்கோளான "அடிமைத் தளைகளையிலிருந்து வெளியேற போராடும் கறுப்பின மக்களோடு சேர்ந்து போராடாமல், வெள்ளை நிற தொழி லாளர்கள் தங்களுக்கு நேரும் சொந்த வர்க்க சுரண்டல்களை தடுக்க முடியாது”. 


சமூக நீதிக்கு சவால்


சான் ஓசே அமைதி மற்றும் நீதி மையத்தின் ஆராய்ச்சியாளர் சரத்ஜி. லின் “வகுப்பு மற்றும் சாதிகள்: ஒற்றுமையும் வேறுபாடுகளும்” என்ற தலைப்பில் உரையாற்றி னார். இந்தியாவில் சமூக முரண்பாடுகள் ஓரளவிற்கு பொதுத்துறை நிறு வனங்களால் குறைக்கப்பட்டிருந்தன. ஆனால் சமீப கால அதீத தனியார்மயமாக்கம் காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்து வருகின்றன. இந்த போக்கு சாதிய முரண்கள் நிறைந்த இந்தியாவில் சமூகநீதிக்கு சவாலாக இருக்கும். ஏனென்றால் இந்திய முதலாளித்துவம் என்பது பொதுவாக சாதித்துவம் வாய்ந்தது என்று அவர்வாதிட்டார். இந்தியாவில் பணியமர்த்தல் பெரும்பாலும் பாரபட்சமான தாக இருப்பது வெளிப்படையானது என்றும் கூறினார். வர்க்க சுரண்டலில் அடங்காத பாலினம், இனம் மற்றும் சாதி போன்ற அனைத்து சமூக முரண்பாடுகளையும் நாம் எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


வெண்மணி பொன்விழா சிறப்புமலர்


விழாவின் ஒரு பகுதியாக, தமிழ் நாளிதழ் “தீக்கதிர்” வெளியிட்ட வெண்மணி 50-ம் ஆண்டு சிறப்பு நினைவு மலரை முனைவர் சூரஜ் யெங்தே கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தினார். இந்த வெளியீடு டிசம்பர் 25, 1968 அன்று கீழ்வெண்மணி போராட்டத்தில் நிலச்சுவான் தாரர்களால் கொல்லப்பட்ட 44 தலித்துமக்களைப் பற்றிய கவிதை மற்றும்வரலாற்று கட்டுரைகளை உள்ளடக்கியது. சான் பிரான்சிஸ்கோ வளை குடாப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மணி மு.மணிவண்ணன், இந்திய அமெரிக்க முஸ்லீம் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜாவீத் மற்றும் ஃபஸல், எய்டு அமைப்பின் வித்யா மற்றும் பவன் ஆகியோருக்கு முனைவர் சூரஜ் யென்தே, சாண்டி பெர்ரி மற்றும் சரத் ஜி. லின் ஆகியோர் கீழ்வெண்மணி நினைவு மலரை அளித்தனர்.


முன்னதாக அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் கனகலட்சுமி கூட்டத்தை வரவேற்றுப் பேசினார். டாக்டர். அம்பேத்கரின் அரச சோசலிசம் கொள்கைப் பற்றிய வரலாற்றுப் பார்வை, அண்ணலின் கொள்கை நிலைப்பாடு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சியில் நீதித்துறையின் பங்கு ஆகிய வற்றை வரவேற்புரையில் கூறினார். அம்பேத்கரின் சமூக மக்களாட்சி என்பது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் கருத்துக் களை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறினார். கோபி, முனைவர் சூரஜ் யெங்தேயையும், எய்டு அமைப்பின் அஷ்தி, சாண்டி பெர்ரியையும் பவன், முனைவர் சரத் ஜி.லின்னையும் அறிமுகப்படுத்தினர். அம்பேத்கர் கிங் படிப்பு வட்டத்தின் கார்த்திகேயன் கீழ்வெண்மணி சிறப்பு வெளியீட்டை வழி நடத்தினார். படிப்பு வட்டத்தின் இளஞ்சேரன் நன்றி தெரிவித்தார். செல்வராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழாவின் சிறப்பு அம்சமாக நிறைய புதுமுகங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதை பார்க்க முடிந்தது. நிறைய இந்தியர்அல்லாத மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்க்கும்போது அமெரிக்க அரசியலிலும் அம்பேத்கரின் சமூகநீதி கொள்கை அதிகமாக பரவிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.


- கூப்பர்டினோ 

கலிஃபோர்னியா