வேலூர்,ஏப்.27- திருப்பத்தூரை அடுத்த உடையாமுத்தூரில் நாயக்கர் கால உடன்கட்டை நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, வரலாற்று ஆர்வலர்கள் செ.ரஜினி, திலீப் ஆகியோர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றைக் கண்டறிந்தனர். இது குறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியது:திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் சாலையில் 7 கி.மீ தொலைவில் பெரிய உடையாமுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் 4 அடி உயரமும்4 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பலகைக் கல்லில் போரில் உயிர்விட்ட வீரனின் சிற்பமும், அவருடன் உடன்கட்டை ஏறி உயிர்விட்ட மனைவியின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளன. இந்த உடன்கட்டை நடுகல் அல்லது சதிக் கல் நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த நடுகல்லில் உள்ள வீரன் வலதுகையில் கத்தியும் இடது கையில் வில்லொன்றையும் தாங்கியுள்ளார். காதுகளில்குண்டலங்களும், தலையில் பெரிய அழகிய கொண்டையும் அணிந்துள்ளார். உடன்கட்டை ஏறிய பெண் வலது கையில் கள்குடம் ஒன்றை ஏந்தியிருப்பதும், இடது கையை உயர்த்தியபடி இருப்பதும் உடன்கட்டை ஏறியதற்கான அடையாளங்களாகும்.இந்த நடுகல்லை இவ்வூர் மக்கள் தாண்டராயப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். போகிப்பண்டிகை மற்றும் அமாவாசை தினங்களில் இவ்வூர் மக்கள் பூஜை செய்து வழிபடுகின்றனர். வெட்டவெளியில் உள்ள இந்நடுகல்லைத் தொல்லியல்துறை பாதுகாக்க வேண்டும். இவ்வாறுஅவர் கூறினார்.