tamilnadu

img

மும்பை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே அதிர்ச்சித் தகவல்

நாடு முழுவதும் 3 கோடி முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவும், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜி.கோல்சே பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் பி.ஜி. கோல்சே பாட்டீல், ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஆய்வை மேற்கோள் காட்டி, மேற்கண்ட குற்றச் சாட்டை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து 39 லட்சத்து 27 ஆயிரத்து 882 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் 17 லட்சம் வாக்காளர்கள் தலித் வாக்காளர்கள் ஆவர். அதேபோல 10 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த இரு தரப்பினரின் எண் ணிக்கை மட்டும் 27 லட்சம் ஆகும். இதனால், மகாராஷ்டிரத்தில் 27 லட்சம், தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள், மக்களவைத் தேர்தலில் வாக்க

ளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசியல் லாபத்திற்காக நடந்துள்ள இந்த வாக்காளர் பெயர் நீக்கத்தின் பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. ஐடி என்ஜீனியரும், ‘வோட்டர் ஆப்’பின் நிறுவனருமான காலித் சாய்புல்லா என்பவர்தான், வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான ஆய்வை மேற்கொண்டவர் ஆவார். 


இவரது குழுவினர், மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 69 மக்களவைத் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு, இந்த தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளனர். மகாராஷ்டிர நிலைமை இதுவென்றால், நாடு முழுவதும் 12 கோடியே70 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 3 கோடி என்று காலித் சாய்புல்லா கூறுகிறார். எனவே, இந்த மாபெரும் தவறைத்திருத்திக் கொள்ள, தேர்தல் ஆணையத்திற்கு இப்போதும்கூட கால அவகாசம் உள்ளது. இவ்வாறு பி.ஜி. கோல்சே பாட்டீஸ் கூறியுள்ளார். இதனிடையே நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் விவரம், தெருவில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை, அந்த வீடுகளில் உள்ள வாக்குகள் விவரம் ஆகிய புள்ளிவிவரங்களுடன் ‘வோட்டர் ஆப்’பில் இருப்பதாக அதன் நிறுவனர் காலித் சாய்புல்லா தெரிவித்துள்ளார்.