tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : மகாகவி பாரதி பிறந்தநாள்....

தமிழ் நிலத்தில்  ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த  சொல் உழவன். மண்ணுள்ள காலம்  வரை மறக்க முடியாதகவிஞன். மக்கள் மனங்களில் என்றும் வாழும் மகாகவி பாரதி.  சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

 ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள்.  இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!  முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே, `சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

 எண்ணற்ற கவிதைகளையும் பாடல்களையும் இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்து ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் பாரதியார். பாரதிக்கு  தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!  தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ . அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்ததாம்.  ரஷ்யப்புரட்சி குறித்து இந்தியாவில் போற்றிப் பாடிய முதல் கவி மகாகவி  பாரதி. “ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி” எனக் கூத்தாடிபுரட்சியின் மகோன்னதத்தை உணர்த்தியது வரலாற்றுச் சிறப்பு மிக்கது. குறுகியகாலமே வாழ்ந்தாலும் குறுகிக் கிடந்த மானுடத்தை நிமிரச் செய்த  ஓய்வறியாப்படைப்பாளி. களத்தில் நின்ற போராளி.எழுத்தில் அவர் தொடாத பொருள்களில்லை. அவரது கவிதைகளும் பாடல்களும் தமிழ் கூறும் நல்லுலகில் நிலைத்துவாழும்  என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

===பெரணமல்லூர் சேகரன்===

;