tamilnadu

img

காட்டுப்பன்றி தொல்லை: மூன்று கி.மீ. தொலைவுக்கு அப்பால் சுட வனத்துறைக்கு அனுமதி

சென்னை,ஜன.10- தமிழ்நாடு சட்டப்பேரவையில்  (ஜனவரி 10) கேள்வி நேர முடிவில், வன விலங்குகளால் விளைநிலங் களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 25  உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். விவசாயிகளின் பயிர்களைச் சேதப்படுத்தும் யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற வன விலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கே.ஏ.செங்கோட்டையன், ரூபி ஆர்.மனோகரன், ஜி.கே.மணி, ரகுராமன், ஜெகன் மூர்த்தி, வேல்முருகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர். கேரள மாநிலத்தைப் போல தமிழகத்திலும் காட்டுப் பன்றிகளை சுட்டுத்தள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். வனத்துறை அமைச்சர் க.பொன்முடி பதிலளிக்கையில், “காட்டுப்பன்றிகளால் ஏற்படும் தொடர்  புகார்களை ஆய்வு செய்ய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜனவரி 9 அன்று முதலமைச்சர் புதிய அரசாணை வெளியிட்டுள்ளார். அதன்படி காப்புக் காட்டிலிருந்து மூன்று மண்டலங்கள் வகுக்கப்பட்டுள்ளன: - ஒரு கிலோமீட்டர் வரை: சுட அனுமதி இல்லை. - 1-3 கிலோமீட்டர் வரை: பிடித்து திருப்பி அனுப்ப வேண்டும். - மூன்று கிலோமீட்டருக்கு அப்பால்: வனத்துறை அதிகாரிகள் சுட்டுப்பிடிக்க அனுமதி. விவசாயிகளுக்கும் சுடும் அனுமதி  வழங்குவது குறித்து பரிசீலிக்கப்  படும்” என்றார். வன விலங்குகளால் ஏற்படும் உயி ரிழப்புகளுக்கான நிவாரணத் தொகை  இருமுறை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.10 லட்சமாக வழங்கப்படுகிறது. 2022 முதல் இன்று வரை 22,060 பேருக்கு ரூ.39.28 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். தேசியப் பறவையான மயில், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பட்டியல் 1-இல் பாதுகாக்கப்பட்ட அரிய இனமாக உள்ளதால், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த தொழில்நுட்ப மற்றும் பாரம்பரிய வழிமுறைகளைக் கை யாள வனத்துறை முயன்று வருவ தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.