மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி- எய்ம்ஸ் மருத்துவமனை,நெய்பர் மருத்துவக்கல்வி ஆராய்ச்சிக்கழகம், நூறுநாள் வேலைத்திட்டம்- உள்ளிட்ட பிரச்சனைகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு, இவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் மோடி அரசை அம்பலப் படுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் டிசம்பர் 23 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற 400 கிலோமீட்டர் நடைபயண இயக்கம், இதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் புத்துணர்ச்சியையும் நம்பிக்கை யையும் ஏற்படுத்துவதாக அமைந்தது. மக்கள் கம்யூனிஸ்டுகள் மீது மட்டும்தான் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். மதுரை மாவட்டம் முழுவதும் நடைபயணத்தின் போது எதிரொலித்த அந்த நம்பிக்கை குரலின் சில துளிகள் இங்கே: சென்ற இடமெல்லாம் 100 நாள் வேலை செய்த பெண்கள் கையெடுத்து கும்பிட்டு வரவேற்றார்கள். எங்க வேலைய பாது காத்துக் கொடுங்க என்றனர். 22 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்குறாங்க; 100 நாள் எப்படியாவது கொடுக்க வைங்க எனச் சொல்லி வரவேற்றனர். குருவித்துறையில் மாற்றுத்திறனாளிகள் இருவர் சந்தோஷ மாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து வரவேற்றனர். அந்த ஊரில் உள்ள அழகர்சாமி என்ற மூத்த தோழர் 1977-இல் நான் மட்டுமே இந்த ஊரில் செங்கொடி தூக்கி நடந்தேன்; இப்ப செங்கொடி தூக்கு வதற்கு இவ்வளவு பேர் இருக்காங்க; சந்தோசமாக இருக்கு; உங்க எல்லாருடனும் என்னால நடந்து வர முடியாமல் போச்சே என்று வருத்தத்தோடு, வாழ்த்தி வழி அனுப்பினார். காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்று கட்சியில் உறுப்பினராகி செயல்படும் ஒரு தோழர் அந்த பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி யில் ஓடி ஓடி வரவேற்புக்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார். பல பகுதிகளில் பெண்கள் நோட்டு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து குலவை போட்டு வரவேற்றனர்.
அயராமல் நடந்த 89 வயது தோழர்
கட்சியின் மூத்த தோழர் முள்ளிப்பள்ளம் பாக்கியம் அம்மாள் எங்களைப் பார்த்ததும் கட்டி அணைத்து சிரித்த முகத்தோடு வரவேற்றார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து இருபுறங்களிலும் தோழர்கள் ஓடி ஓடி நோட்டீஸ் கொடுத்து மக்களோடு பேசி உரையாடினர். 89 வயது தோழர் ராமராஜ் அயராமல் நடந்தார். நீங்களும் ஏன் இப்படி நடந்து போறீங்க என்று வழியில் பலர் கேட்கிறார்கள். தோழர் ராமராஜ், 100 நாள் வேலைத்திட்டத்தை பாதுகாக்கவும் 150 நாளாக உயர்த்தச் சொல்லியும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க நாங்க நடக்கிறோம் என்று கம்பீரமாகச் சொன்னார். எங்களுக்காக இந்த வயதிலும் நடக்கிறீங்களே என சொல்லி கையெடுத்து கும்பிட்டு வழி அனுப்பினார்கள் பலரும். வயதான ஒரு அம்மா எனக்கு மகனும் இல்லை; மகளும் இல்லை; இந்த 100 நாள் வேலையைப் பார்த்துத் தான் கஞ்சி குடிக்கிறேன் என்று கையைப் பிடித்துக்கொண்டு சொன்னது, கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய நூறுநாள் வேலைத்திட்டம் தான் கிராமங்களை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறது என்பதை பளிச்சென்று காட்டியது.
அம்மா கால் படாத வீடில்லைம்மா
பிரச்சார வாகனத்தில் அன்னை கே.பி.ஜானகி அம்மாள் படத்தை பார்த்ததும் ஜானகியம்மா கட்சி என்று பல மூதாட்டி கள் பேசிக் கொண்டது சிலிர்ப்பை ஏற்படுத்தியது. பாசிங்காபுரத்தில் ஒரு மூதாட்டி இப்படிச் சொன்னபோது, ஜானகி அம்மா தெரியுமா என்று கேட்டோம்; அந்த அம்மா கால் படாத வீடு இல்லம்மா எங்க ஊர்ல என்றனர் பலரும் சேர்ந்துகொண்டு. குலமங்கலத்தில் இளைஞர்கள் சிலர், எய்ம்ஸ் வந்துவிடுமா என்று கேட்டனர். அதற்காக தான் நடக்கிறோம் என்றதும், விட்டுறாதீங்க; உங்களால தான் முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். பெரிய இலந்தைகுளத்தில் நடந்து போகும் பொழுது, வெண்டை க்காய் காட்டில் களையெடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி, ஏம்மா இப்படி நடையா நடந்து போறீங்க, எங்க போறீங்க என்று ஓடிவந்து எங்களிடம் கேட்டார். எய்ம்ஸ் மருத்துவமனைக்காகவும் 100 நாள் வேலைக்காகவும் நாங்கள் நடக்கிறோம் என்று சொன்ன உடனே, நீங்க எங்களுக்காக நடக்கிறீங்களா; நானும் உங்க கூட கொஞ்ச தூரம் நடந்து வாரேன் என்று சொல்லி; எங்க வீட்லயும் படிச்சிட்டு பிள்ளைங்க வேலையில்லாம இருக்காங்க, அதையும் சேர்த்துப் பேசி எங்க பிள்ளைகளுக்கு வேலை கொடுக்க சொல்லுங்க என்று சொல்லி அந்த ஊரின் எல்லை முடியும் வரை நடந்து வந்தார். டூவீலரில் செல்பவர்கள், போக்குவரத்து தொழி லாளர்கள், விவசாயிகள், குழந்தைகள் என எல்லா தரப்பு மக்களும் வழியெங்கும் தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டார்கள். எங்களுக்காக குரல் கொடுக்க உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்று, நெருங்கிவந்து பேசிச் சென்ற எத்தனையோ எளிய மக்களின் நம்பிக்கை, வலியையும் மீறி எமது தோழர்களின் கால்களை எட்டி நடைபோடச் செய்தது.