tamilnadu

img

கப்பலில் வந்த கனவு - உதயசங்கர்

மணியின் வீட்டுக்கு முன்னால் தண்ணீர் ஓடியது. கொஞ்சம் மழை பெய்தாலே போதும். அவன் வீட்டைச் சுற்றி தண்ணீர் ஓட ஆரம்பித்து விடும். இப்போதோ மூன்று  நாட்களாக மழை பெய்து கொண்டே இருந்தது. யாரும் வீட்டை  விட்டு வெளியே வரமுடியவில்லை. பல வீடுகளில் தண்ணீர் புகுந்து விட்டது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குப் போய் விட்டார்கள்.  மணியின் வீடு மிகவும் சிறியது. ஒரே ஒரு அறை மட்டும் தான்.   மணியின் அம்மாவும் அப்பாவும் கவலையுடன் இருந்தார்கள். இன்னும் ஒரு நாள் மழை பெய்தால் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடும். மணி வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஓடும்  தண்ணீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். தண்ணீர் சுழித்துக்கொண்டு, பாய்ந்து, சிறு சிறு கற்களில் ஏறி இறங்கி அழகான ஓவியம் நகர்ந்து போனது.  திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே உள்ளே போய் அவனுடைய ரஃப் நோட்டிலிருந்து பழைய காகிதம் ஒன்றைக் கிழித்தான். அடுத்த சில நொடிகளில் அவன்  கையில் ஒரு காகிதக்கப்பல் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு  வாசலுக்குச் சென்றான். அங்கே ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் அந்தக் கப்பலை மிதக்க விட்டான். அவன் தண்ணீரில் விட்ட உடனேயே கப்பல் வேகமாக ஓடி மறைந்து விட்டது. 

அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மணியின் வீடு அசையத் தொடங்கி யது. மணி பயந்து போய் விட்டான். ஆனால் வீடு மெல்ல அசைந்து அசைந்து நகரத் தொடங்கியது. சன்னல் வழியே வெளியே பார்த்தான். மணியின் வீடு அவன் தண்ணீரில் ஒட விட்ட காகிதக்கப்பலில் இருந்தது. காகிதக்கப்பல் தண்ணீரின் சுழிப்புகளுக்கு ஏற்ப ஆடி ஆடிப் போய்க் கொண்டிருந்தது. நீரின் அலைகளில் ஏறி இறங்கியது. மணிக்கு ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது.  வீடு குட்டியூண்டு இருந்தது. மணியும் குட்டிப்பொம்மை போல இருந்தான். ஆனால் வீடு மாறி விட்டது. வரவேற்பறை, படுக்கையறை, படிப்பறை, சமையலறை என்று தனித்தனியே இருந்தது. மணிக்கென்று உயரம் சிறியதாக ஒரு மேசை, நாற்காலி, மேசை விளக்கு இருந்தன. மணி ஆச்சரியப்பட்டான். முன்பு இப்படி இல்லை. ஒரே அறையின் முன் பகுதி பகலில் வரவேற்பறையாகவும், இரவில் படுக்கையறையாகவும் மாறிவிடும். மணி புத்தகப்பை யை எடுத்து தரையில் உட்கார்ந்து விட்டால் அதுவே படிப்பறை யாகவும் மாயாஜாலம் செய்யும். பின் பகுதியில் சமையலறை இருக்கும். முன்பகுதிக்கும் பின்பகுதிக்கும் நடுவில் ஒரு சாக்குப் படுதா தொங்கும். அவ்வளவுதான். ஆனால் இப்போது அந்த வீடு மாயமாகி மாறி விட்டது.  காகிதக்கப்பல் சில இடங்களில் வேகமாகவும் சில இடங்களில் மெதுவாகவும் போனது. அவன் படிப்பறையில் மேசைக்கு முன்னால் உட்கார்ந்து புத்தகத்தை எடுத்துப் படித்தான். சன்னல் வழியே சூரியன் மிக அருகில் தெரிந்தது. கப்பல் ஒரு பெரிய பாறை மீது மோதி அதிர்ந்தபோது சூரியன் சன்னல் வழியே உள்ளே வந்து விழுந்து விட்டது. சூரியனின் ஒளியில் அந்தப் படிப்பறை மின்னியது. மணி சூரியனை எடுத்து அவனுடைய புத்தகத்துக்குள் வைத்தான். அவ்வளவு தான்.

புத்தகத்திலிருந்து விலங்குகளும், பறவைகளும், பூச்சிகளும், பாம்புகளும், எல்லாம் வெளியே வந்து அறையில் குவிந்தன. மணிக்கு நிற்கவோ, உட்காரவோ, கூட இடமில்லை. செடிகளும் மரங்களும், கொடிகளும் உள்ளே வந்தன.  எல்லாருக்கும் மணியைத் தெரிந்திருந்தது. தெரியாத  மரம் செடி கொடிகள் அவனிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டன. அவன் இதுவரை பார்த்திராத வண்ண வண்ணப்பூக்கள் அவனுடைய தலையைக் கோதி விட்டன.  அவனை விட பிரம்மாண்டமாய் இருந்த நீலநிற வண்ணத்துப்பூச்சி அவனை முதுகில் ஏற்றிக் கொண்டது. இறக்கைகளை அசைத்துப் பறந்து சென்றது. அவனைப் பார்த்த எல்லாமிருகங்களும் தங்களுடைய கைகளை அசைத்தன.  அப்படியே வண்ணத்துப்பூச்சி அறையை விட்டு வெளியே பறந்தது. வீட்டை விட்டுப் பறந்தது. கப்பலை விட்டுப் பறந்தது. அப்படிப் பறக்கும்போது அவன் கீழே குனிந்து பார்த்தான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே போய்க் கொண்டிருந்தார்கள்.  மணி அவர்களைக் கூப்பிட்டான். கத்தினான். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. குனிந்து கைகளைக் குவித்து வாய்க்கு அருகில் வைத்துக் கொண்டு அம்மா என்று  கத்தினான். அம்மா நிமிர்ந்து பார்த்தார். அப்போது வண்ணத்துப்பூச்சியின் மீது உட்கார்ந்திருந்த அவன் நழுவிக் கீழே விழுந்தான். அப்படியே இறகைப் போல மிதந்து மிதந்து தரை இறங்கினான். பாயில் படுத்திருந்த மணி கண்விழித்தான். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. அவனுடைய காகிதக்கப்பல் அவனுக்கருகில் பத்திரமாக இருந்தது. ஆனால் கொஞ்சம் கிழிந்திருந்தது.

;