நடுங்குது நியாயங்கள்
முடங்குது கூனி - ஆட்சி
தொடங்கிய நாள் முதல்
ஹிட்லரின் பாணி
கொடுங்கோலாய் செங்கோல்
வளைகிறது கோணி - தாழ்ந்த
இடங்களில் இருப்போர்க்கு
இல்லை ஒரு ஏணி
தடம்மாறிச் செல்கிறது
தேசம் எனும் தோணி
திடங்கொண்டு கொழுப்பவர்கள்
அதானி அம்பானி
நெடுங்காலம் தனியார்க்கே
போடுகிறார் தீனி
படங்கொண்ட விஷப்பாம்பாம்
மதவெறியைப் பேணி - இவர்கள்
பிடுங்குவது எல்லாமே
தேவையில்லா ஆணி
நீடிக்காது இது நிலைக்காது
நெடுநாள் மானுடம் சகிக்காது
விவசாயிகள் இதை
நிரூபித்த பின்னும்
விரக்தியோ சோர்வோ கூடாது
டெல்லித் தெருக்களையே
வயற்காடு ஆக்கி
ஒரு வருடப் போராட்டத்தை
விதைகள் ஆக்கி
எழுநூறுக்கும் மேலான
உயிர்களை உரமாக்கி
வெற்றியை விளைச்சலாய்
அறுவடை செய்தார்கள்
கமா கூட மாறாது என்று
காட்டினார் கெத்து
சளைக்காத போராட்டத்தால்
சட்டமே ரத்து
பாசிசம் கூட
பணியும் என்பதைப்
பாசனம் செய்யும்
உழவர்கள் உணர்த்தினர்
கும்மிருட்டு இரவுக்கும்
உண்டு ஒரு விடிவெள்ளி
கோடைப் பகலுக்கும்
உண்டுஒரு குளிர்அந்தி
கொட்டும் அடைமழைக்கும்
உண்டுஒரு கடைசித் துளி
கடும்புயலும் ஒருநாள்
கட்டாயம் கரையேறும்
அதுவாய் மாறாது இனி
அமைப்போம் பலமான அணி
-வல்லம் தாஜுபால்