ராமேஸ்வரம்-சென்னை ரயில் இயக்க சிபிஎம் கோரிக்கை
இராமநாதபுரம்:
இராமேஸ்வரம்-சென்னை இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் காசிநாததுரை வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஐந்து மாதங்களாக கொரனா தொற்று காரணமாக தமிழகத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் மற்றும் சேது விரைவு ரயில்இயக்கப்படும் என இராமநாதபுரம் மாவட்டமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிடவில்லை.ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு“இராமேஸ்வரத்திற்கு ரயில் விட வேண்டுமென தமிழக அரசு கேட்டுக் கொள்ளும்பட்சத்தில் அவசியம் ரயில் இயக்கப்படும்”என தெரிவித்துள்ளனர். வாழ்வாதாரத்திற் காக பல்வேறு நகரங்களில் வேலை செய்துவந்த இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குஇராமேஸ்வரம்-சென்னை விரைவு ரயில் இயக்குவது பெரும் உதவியாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் இராமேஸ்வரம் - சென்னை விரைவு ரயில் இயக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் சந்திப்பு இயக்கம்
இராமநாதபுரம்:
இராமநாதபுரம் தாலுகா கே.கே.நகர்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாலுகாகுழு உறுப்பினர் ஜெயலெட்சுமி தலைமையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.காசிநாதத்துரை, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல் என்.கலையரசன், தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், பி.இராமலிங்கம், கெளசிக் ராஜனாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கட்டுமான சங்க கிளை அமைப்பு
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஜெ.ஜெ.காலனியில் சிஐடியு-கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவராக மணிமாறன், செயலாளராக லட்சுமணன், பொருளாளராக முத்துமாரி, துணைத் தலைவராக மாணிக்கம், துணைச் செயலாளராக ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொது செயலாளர் பி.ராமர், வட்ட செயலாளர் ஜின்னா, கன்வீனர் பரமசிவம் ஆகியோர் அமைப்புக்கூட்டத் தில் கலந்துகொண்டனர்.
தேனியில் 78 பேருக்கு கொரோனா
தேனி:
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டதில் மூன்றுகாவலர்கள் உட்பட 78 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கடந்த 5-ஆம் தேதி கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட உத்தமபாளையம் அப்பிபட்டியை சேர்ந்த 66 வயது நபர்6-ஆம் தேதி பரிசோதனை முடிவு தெரியும்முன்பே உயிரிழந்தார். போடி கும்பிநாயக் கன்பட்டியை சேர்ந்த 67 வயது முதியவர் கடந்த 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார். கம்பம் வடக்குகாவல்நிலையத்தில் பணிபுரியும் அனுமந்தன்பட்டியை சேர்ந்த 44 வயது தலைமைக் காவலர், கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் கம்பத்தை சேர்ந்த 50 வயது தலைமை காவலர், கண்டமனூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் தேனி கொடுவிலார்பட்டியை சேர்ந்த 38 வயதுகாவலர் உட்பட 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
விருதுநகர்:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென வலியுறுத்தி வன வேங்கைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் இரணியன், உலகநாதன், ரவி, முத்துமாரி, விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.