tamilnadu

தீக்கதிர் மதுரை மண்டலச் செய்திகள்

ஆட்சியர் ‘திகைப்பு’

திருவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கண்மாய் மற்றும் குளங் களை பார்வையிட புதன்கிழமை பிற்பகல் சுமார் 3 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், சார் ஆட்சியர் தினேஷ்குமார், சமூகநல துறை ஐஏஎஸ் அதிகாரி மதுமதி உள்ளிட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை கோனேரி குளத்தை பார்வை இட சென்று கொண்டிருந்தனர் அப்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்ற வாகனத்தை குலாலர் தெரு அருகே  500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் மறித்து போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், “ குலாலர் தெருவில் வசிப்பவர்களில் வீட்டுக்கு ஒருவர் செங்கல் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்கள்  ஒரு வருடத்திற்கு மேலாக செங்கல் தொழிலுக்கு பயன்படும் மண் அள்ள பாஸ் வழங்கப்படுவது இல்லை. எங்களுக்கு உடனடியாக மண்அள்ள பாஸ் வழங்க வேண்டுமென்றனர். மறியலால்  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு காத்திருந்தனர்.

                            ***********************

மூதாட்டி பலி

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பராசக்தி காலனி பகுதியைச்சேர்ந்த கந்தசாமி மனைவி ராஜேஸ்வரி (70). கடந்த சில நாட்களாக சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிதயில்  தொடர்ந்து மழை பெய்து வந்தது.கந்தசாமி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்ட நிலையில், ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது திடீரென வீட்டின் முன்புறச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்சிய ராஜேஸ் வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

                            ***********************

சிவகாசியில் கால்நடை மருத்துவமனை திறப்பு

விருதுநகர்:
சிவகாசி பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மூன்று கால்நடை மருத்துவமனைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி துவக்கி வைத்தார்.சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி, கிருஷ்ணபேரி, வெம்பக்கோட்டை அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதியகால்நடை மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டன.புதிய கால்நடை மருத்துவமனைகளை பாவ்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன், சார் ஆட்சியர் தினேஷ்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அருணாச்சலகனி ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனரி.

                            ***********************

வழக்கறிஞர்கள் போராட்டம்

மதுரை:
கொரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட வழக்கறிஞர் சங்கம் மற்றும் வழக்கறிஞர் சேம்பரை மருத்துவப் பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைப் பிடிக்கச் செய்து உடனடியாக திறக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றம் முன்பு மதுரை மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.மாவட்டத் தலைவர் சுப்பராஜ் தலைமையில்  நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச்  செயலாளர் ராமசாமி, மாநிலப் பொதுச் செயலாளர்  முத்து அமுதநாதன், மாநிலச்செயலாளர் ஷாஜிசெல்லான், மாநிலக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், பாஸ்கரன், சொளரி ராமன், ஜெயக்குமார், சீனிவாசராகவன், மதுரை வழக்கறிஞர் சங்க செயலாளர், தலைவர்  பார்கவுன்சில் உறுப்பினர் அசோக் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

                            ***********************

மாணவர்கள் கோரிக்கை

விருதுநகர்:
திருவில்லிபுத்தூர் தொகுதியில்  அரசு கலைக் கல்லூரி தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. தமிழக அரசு, கலைக் கல்லூரிக்கு  சொந்தக் கட்டடம் கட்டும்பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இந்திய மாணவர் சங்கத்தின்  மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தரைலவர்  கே.சமயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.மாடசாமி முன்னிலை வகித் தார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் சிறப்புரையாற்றினார்.இந்தக் கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட  அரசு கலைக் கல்லூரி கட்டும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கல்வித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளை சுழற்சி முறையில் தொடங்கவேண்டும். 2017-18-ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச  மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;