ராணிப்பேட்டை,டிச.10- மாண்டஸ் புயல் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. அரக்கோணம், மின்னல், பனப்பாக்கம், காவேரிப் பாக்கம், ஆற்காடு பகுதியில் மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக மின்னலில் 197 மி. மீட்டர் பதிவானது. பனப்பாக்கத்தில் 195, அரக்கோணத்தில் 141, காவேரிபாக்கத்தில் 109 மி. மீட்டர் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாண்டஸ் புயலின் கோரத் தாண்டவத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. சாலையோரம் நின்ற பெரிய புளிய மரங்கள் வேரோடு விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 5 குடிசை வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பாதிக்கப்பட்டவர்களை முகாம்களில் தங்க வைத்தனர். ஆரப்பாக்கத்தில் ஆயிரக்கணக்கான வாழைகள் புயல் காற்றில் சாய்ந்து நாசமானது. பாணாவரம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் வீட்டின் மீது புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் குமார் (69) அவரது மனைவி சத்யா மற்றும் மகன் சவுந்தர்ராஜன் ஆகியோர் காயமடைந்தனர்.