tamilnadu

img

யாருக்காக? - சி.பி.கிருஷ்ணன்

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் 13வது மாடியில் உள்ள ஹாலில் கூடியிருந்த எல்லோரின் மனதிலும் ஒரே கேள்வி. அந்த இடமே ஒரே பரபரப்பாக இருந்தது. காலை 11 மணிக்கு கார்ப்பரேட் முதலாளிகளின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 60 பேர் கொண்ட கூட்டத்திற்கு சாதாரணமாக பாதி பேர் கூட வரமாட்டார்கள். ஆனால் இரண்டே நாள் நோட்டிசில் இன்று கிட்டதட்ட எல்லோருமே வந்து விட்டனர். சிலர் தங்கள் வெளி நாட்டு  பயணத்தையே ரத்து செய்துவிட்டு வந்துள்ளதாக தகவல். தலைவர் வருகைக்காக அனைவரின் விழிகளும் காத்திருந்தன.  ஊடகங்களில் வந்த செய்திக்கு மேல் வேறு ஏதாவது கூடுதலான செய்தி உண்டா என்று எல்லோரும் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். பலரும் பல கற்பனை செய்திகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஆதாரபூர்வமான செய்தி யாரிடமும் இல்லை. அங்கு கூடியிருந்தவர்களிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் நட்சத்திர ஓட்டல் முதலாளி மாதவனும், அவரைப் போன்று ”ஐந்து நட்சத்திர ஓட்டல் முதலாளிகள்” மேலும் மூன்று பேரும் ரொம்பவே கவலையாய் இருந்தனர்.

”ஐந்து நட்சத்திர ஓட்டல்களை அரசு எடுத்துக் கொள்ளப் போகிறது” என்ற செய்தி அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்திருந்ததுதான் இதற்கான காரணம். கூடவே வந்த செய்தி தான் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் இங்கு இழுத்து வந்து விட்டது. அரசின் அந்த செய லுக்கு முதலாளிகள் சங்க தலைவரின் ஒப்புதலும் உள்ளது என்பதுதான் அது. செய்தி  வெளியிட்ட எந்த ஊடகமும் யாரையும் மேற்கோள்  காட்டவில்லை. ஆனால் வெளியிடப்பட்ட விதத்தை பார்த்தால் இது வதந்தி மாதிரியும் தெரிய வில்லை. எனவே நேரிடையாக தலைவரைப் பார்த்து விஷயம் தெரிந்து கொள்ளத்தான் அங்கு அனைவரும் வந்திருந்தனர்.  11 மணியடிக்க இரண்டு நிமிடம் முன்னதாக தலைவர் வந்தார். எல்லோரும் அமைதியாகினர். தலைவர் முகத்தில் எந்த பரபரப்பும் இல்லை. எப்போதும் போல் சகஜமாக இருந்தார். அவர் முக பாவனையிலிருந்து விஷயத்தை கிரகிக்க முயற்சி  செய்தவர்கள் தோல்வியையே சந்தித்தனர். தலைவரே அமைதியை உடைத்தார். ”நாட்டில் உள்ள 22 ஐந்து நட்சத்திர ஓட்டல்களையும் அரசு  எடுத்துக் கொள்ள இந்த நிர்வாகக்குழு ஒப்புதல் அளிக்கிறது” என்று ஒற்றை வரி தீர்மானத்தை  முன் மொழிந்தார். நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஊடகச் செய்தி உண்மையென கூட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பளிச்சென புரிந்து விட்டது. ஆனால் எல்லோ ருக்கும் “இவர் யார் தன்னிச்சையாக முடி வெடுக்க?” என்று ஒரே கோபம். சிலர் மெல்லிய  குரலில் கேள்வி எழுப்ப முயன்றனர். 

ஒரே நேரத்தில் நாலைந்து பேர் கேள்வி கேட்க முனைந்தனர். குறிப்பாக ஐந்து நட்சத்திர ஓட்டல் முதலாளிகள் நால்வரும் ஒரே ஆவேசமாகினர்.  “ஊர்ல இருக்கிற சின்ன சின்ன   அரசு நிறுவனத்தை கூட நாம் விட்டு வைக்கற தில்லை. அடிமாட்டு விலைக்கு வாங்கி அனுப வித்துக் கொண்டு இருக்கோம். அரசு அவ்வளவு தாராளமாக இருக்காங்க. அப்படி இருக்கும் போது, எங்கள் ஓட்டல்களை அரசு எடுத்துக் கொள்ள விட்டுக் கொடுக்க நாங்கள் என்ன பைத்தியமா? அதை அனுமதிப்பதற்கு நீங்கள் யார்?” என்று தலைவரை நேருக்கு நேராக காட்டமாகவே கேட்டுவிட்டார் மாதவன்.  இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. எல்லா கூட்டமும் அமைதியாகவே நடக்கும். பெரிய கருத்து முரண்பாடு எதுவும் கிடையாது. அவர்களுக்குள் போட்டி இருந்தாலும், எல்லோரது நோக்கமும், குறிக்கோளும் ஒன்று தானே. அதனால் பெரிய விவாதம் எல்லாம் இருக்காது. சில நிர்வாகக்குழுக் கூட்டங்கள் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிடும்.  “சரி! சரி! எல்லோருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன். ஒவ்வொருத்தரா கேளுங்க; முதல்ல நான் மாதவன் சாருக்கு பதில் சொல்றேன்”. ”உங்க ஓட்டல் பிசினஸ் எப்படி போகுது?” என்று நிதானமாக மாதவனை எதிர் கேள்வி கேட்டார் தலைவர். 

“அது எதுக்கு இப்ப?” என்றார் மாதவன்.  “பதில் சொல்லுங்க மாதவன் சார்; காரணத் தோடத்தான் கேட்கிறேன்”   “ரொம்ப டல்லாத்தான் போகுது. கொரானா வால 2 வருஷமா நாங்க அடிபட்டது உங்களுக்கு தெரியாதா? இன்னும் சகஜமாகவே இல்லை, பயங்கர நஷ்டம்”  “முந்தின வருஷத்த பாக்கும்போது இந்த 2 வருஷத்தில சுமார் எவ்வளவு நஷ்டம்?” “இருக்கும். 1000 கோடி வரை இருக்கும்”  “அப்படின்னா இத ஈடுகட்டி திரும்ப பழைய நிலைக்கு வர எவ்வளவு நாள் ஆகும்? “எவ்வளவு நாளா? குறைஞ்சது 4 வருஷம் ஆகும். அதுவும் இடையில திரும்ப எந்த கொரானா அலையும் வரலைன்னாதான்”. “சரி. உங்க மொத்த முதலீடு எவ்வளவு?”.   “ஏங்க தொழில் ரகசியமெல்லாம் பப்ளிக்கா கேக்கறிங்க?” 

“சொல்லுங்க சார், எல்லாம் நம்பாளுங்கதான்” “2000 கோடி இருக்கும். அதில்லாம நிலத்தோட விலை 1500 கோடி இருக்கும்” “நிலத்தோட விலைய பத்தி பேசாதீங்க. நகரத்துக்கு நடுவுல இருக்கற நிலத்த  எப்படி பொறம்போக்குன்னு மாத்தி எழுதி 100 கோடில முடிச்சோம்னு……” “சரி, சரி அந்த கதையை விடுங்க” “என்ன மாதவன் சார்! இங்க இருக்கற முக்கா வாசி பேருக்கு இந்த மாதிரி ஒரு பின்னணி இருக்கத்தானே செய்யுது? அது உங்களுக்கு தெரியாததா?” “அது சரி. என்ன விஷயம் சொல்லுங்க” பொறுமையிழந்து கேட்டார் மாதவன். “ஆக உங்க முதலீடு 2000 கோடி, நிலத்தோட விலை நீங்க சொன்னபடியே 1500 கோடி, 2 வருஷ நஷ்டம் 1000 கோடி … ஆக 4500 கோடி; மொத்தம் 5000 கோடின்னா ஓகேவா? உங்க ஓட்டலை கொடுத்துடுவீங்களா?” மாதவன் முகம் அப்படியே பிரகாசமாயிடுச்சு. “5000 கோடி கொடுத்தா நான் இப்பவே எழுதி  கொடுத்துட்டு வேற பிசினஸ் பாக்க போயிடுவேன்” என்றார்.

“அரசிடமிருந்து இந்தத் தொகை வாங்கித் தர நான் காரண்டி. மத்த ஓட்டல் முதலாளிங்க என்ன சொல்றீங்க?” என்றார் தலைவர். “நாங்களும் ரெடி” என்று மற்ற மூன்று ஓட்டல் முதலாளிகளும் ஒரே குரலில் கோரஸாக சொன்னார்கள். “சம்பந்தப்பட்டவங்களே தயாரா இருக்காங்க.  அப்புறம் இதில மத்தவங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?” “இப்ப நஷ்டம் வருதுன்னு கொடுத்துடறோம்;  4 வருஷம் கழித்து லாபத்தில் வந்துடுச்சுனா?” என்று ஒருவர் குறுக்கே புகுந்து கேட்டார். “அப்ப திரும்ப எடுத்துக்கலாம்; நம்ப அரசு தானே! எப்ப கேட்டாலும் உடனே கொடுத்துடு வாங்க” என்றார் தலைவர். “ஆனாலும் இந்த மாதிரி நம்ப சொத்துக்களை  அரசு கையில கொடுக்கறது மோசமான முன்னு தாரணமாக ஆயிடாதா? இது நம்முடைய மத்த பிசினஸை பாதிக்காதா?” ஒரு நிர்வாகக்குழு உறுப்பினர் கேட்டார். “

அதெல்லாம் எந்த மோசமான முன்னுதாரணமும் ஆகாது; கடந்த 30 வருஷத்தில நம்  தொழில் மீது கைவைக்க எந்த அரசுக்கு தைரியம் இருந்தது? அத பத்தியெல்லாம் கவலைப்படா தீங்க. அப்படி எதுவும் நடக்காது” என்றார் தலைவர். “அது சரி. அரசுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்  நஷ்டத்தில இருக்குன்னு தெரியாதா? பிறகு  அவங்க எப்படி இந்த திட்டத்துக்கு ஒத்துக்கு வாங்க?” என்றார் ஒருவர். “வோடபோன்- ஐடியா கம்பெனி நஷ்டத்தில தான போகுது? அங்க 16000 கோடி அரசு முதலீடு பண்ணலையா? அது மாதிரிதான் இதுவும். அது நஷ்டம்னு வெளில தெரிஞ்ச அளவுக்குக் கூட ஓட்டல் தொழில் நஷ்டம்னு வெளியில தெரியாது. அதனால இதுல கண்டிப்பா அரசு முதலீடு செய்வாங்க.” என்றார் தலைவர். “எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க தலைவரே?” என்று ஆவலாக வினவினார் மற்றொரு உறுப்பினர். “என்னங்க விஷயம் புரியாத ஆளுங்களா இருக்கீங்க? நான் மேலிடத்தில மொத்த திட்டத்தை யும் பேசிட்டுதான உங்ககிட்ட அவ்வளவு உறுதியா சொல்றேன். பொதுத்துறை நிறுவனங்கள வித்ததுல, பணமாக்கல் திட்டத்தில் திரட்டினதுல அரசு கிட்ட ஒரு லட்சம் கோடி பக்கம் கைவசம் இருக்காம். என்ன பண்றதுன்னு கேக்கத்தான் கூப்பிட்டாங்க. நான் தான் ஓட்டல் வாங்கற யோசனையை கொடுத்தேன். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. என்ன விலைன்னாலும் வாங்கிடலாம்னு சொல்லிட்டாங்க…”

“அப்புறம்?” என்றார் ஒருவர் சுவாரசியமாக. “நூறு நாள் வேலை திட்டம், விவசாய விளை  பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று இந்த ஒரு லட்சம் கோடி வீணாயிடப் போயிடுதேன்னு கவலையா இருந்தாங்க. நான் போய் இத சொன்னவுடனே நிம்மதியாயிட்டாங்க. அப்புறம் என்ன? நம்ப கூட்ட முடிவ அவங்க கிட்ட சொன்னா, டீல் உடனே ஓகே ஆயிடும்” என்றார் தலைவர். “ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நாமதான் வந்து தங்கப் போறோம். இப்போ ஏதாவது சர்விஸ் சரியில்லைன்னா மானேஜரை கூப்பிட்டு கேக்கறோம். அரசு கைக்கு போச்சுன்னா யார கேக்கறது?” என்றார் ஒரு நிர்வாகக் குழு உறுப்பினர். “ஏன்? ஐஏஎஸ் அதிகாரிகள கேக்கலாம். நான் இந்த திட்டத்தை மேலிடத்தில பேசும்போதே தெளிவா சொல்லிட்டேன். ஒவ்வொரு ஓட்டலுக்கும் 10 ஐஏஎஸ் அதிகாரிகளையாவது நிய மிக்கணும்னு. செக்ரெட்டரி லெவல்ல இருக்கற ஒரு சீனியர் ஐஏஎஸ் அதிகாரியை இன்-சார்ஜா போட்டுடணும்னு” என்றார் தலைவர். “அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?” என்று ஆவல் மிகுதியில் குறுக்கே புகுந்து கேட்டார் ஒரு மூத்த உறுப்பினர்.

“அதெல்லாம் அவங்களுக்கும் சம்மதம் தான். உங்களுக்கு சேவை செய்யத்தானே ஐஏஎஸ் கேடரே இருக்கு. அதுக்குத்தானே அப்பப்ப  அவங்கள அமெரிக்கா அனுப்பி ட்ரெயினிங் கொடுத்து வெச்சிருக்கோம்னு சொல்லிட்டாங்க. இதில ஒண்ணு ரெண்டு பேர் ”தன்மானம், மக்கள்  சேவைன்னு” சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருப் பாங்க. அவங்கள ஓட்டல் பக்கமே சேக்க மாட் டோம்னு சொல்லிட்டாங்க” என்றார் தலைவர். எல்லோரும் தன்னிச்சையாக பலமாக கை தட்டினார்கள். தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.  மறு நாள் காலை எல்லா ஊடகங்களிலும் அரசு பிரதிநிதியின் பேட்டி முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டது. “நாட்டின் நலன் கருதி 22 ஐந்து  நட்சத்திர ஓட்டல்களையும் அரசு உடனே எடுத்துக் கொண்டது. வெளி நாட்டு அரசுப் பிரதிநிதிகள், வெளி நாட்டு முதலீட்டாளர்கள், நாட்டின் செல்வாதாரங்களை உருவாக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் என்று முக்கியமானவர்கள் தங்கும் இடமாக இது இருப்பாதால் பாதுகாப்பு கருதி இதனை அரசே எடுத்துக் கொள்கிறது; இதனால் பிற நாடுகளுடனான நட்பு பலப்படும்; உள் நாட்டு முதலீடு அதிகரிக்கும்; அந்நிய செலாவணி உயரும்; ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாடு வேகமாக முன்னேறும்…” என்று அவர் பேட்டி அளித்தார்.  மேலும் ஒரு நிருபரின் கேள்விக்கு பதில்  அளிக்கையில் “இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் கருதி 200 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்” என்று பதில் அளித்தார்.  மற்றொரு நிருபரின் கேள்விக்கு பதில் கூறும்போது “பொதுத்துறைகளை எல்லாம் தனியார்மயமாக்குகிறோம் என்று எங்கள் மீது ஓயாமல் பழி போடும் எதிர்கட்சிகள் “ஐந்து நட்சத்திர ஓட்டல்களை தேசியமயமாக்கும் எங்கள் அரசின் இந்தத் திட்டத்திற்கு” என்ன பதில் சொல்லப் போகின்றன?” என்று சவால் விடுத்தார்.