சென்னை, அக். 21- மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என “துல்லிய ஆற்றல்” விருது விழாவில் செயல் இயக்குநர் சவுந்தரராஜ பெருமாள் கேட்டுக் கொண்டார். “துல்லிய ஆற்றல்” ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வெள்ளியன்று (அக். 21) நடைபெற்றது. ரோசட்டாம் பொறியியல் பிரிவு மற்றும் ஏ.என்.ஓ எனர்ஜி ஆஃப் பியூச்சர் ஆகியவை மாஸ்கோ பொறியியல் இயற்பியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றுடன் இணைந்து கூடங்குளம் என்பிபி கட்டுமானப் பகுதியில் 2ஆவது முறையாக இந்த ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் துறைகளுக்கான ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 24 கல்லூரிகள், 51 பள்ளிகளில் இருந்து 7 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆரம்ப நிலையிலிருந்து சிறப்பாகச் செயல்படும் 650 மாணவர்கள் இறுதி கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு துறையிலும் முதல் 3 மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தென்னிந்தியாவின் ரஷ்ய கூட்டமைப்பின் ஒலெக் அவ்தேவ், ரோசட்டாம் பொறியியல் பிரிவு தகவல் தொடர்புத் துறைத் தலைவர் நினா டிமென்ஸ்டோவா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சவுந்தரராஜப் பெருமாள், ரோசட்டாம் தென்னிந்திய மார்க்கெட்டிங் பிரைவேட் நிறுவனத்தின் மேலாளர் கெசெனியா எல்கினா, அணு இயற்பியல் மற்றும் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியர் அலெக்சாண்டர் வி.நகபோவ், துணைத் தலைவர், என்.ஆர்.என்.யூ. மெபி ஆகியோர் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தனர். கணிதப் பிரிவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் அஜித் அசோக் முதல் பரிசையும், பனிமலர் பொறியியல் கல்லூரி மாணவர் ஆர்.வசந்த் இரண்டாம் பரிசையும், புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் எஸ்.கோவர்தன் மூன்றாம் பரிசையும் பெற்றனர். வேதியியல் பிரிவில் வைஷ்ணவி கல்லூரி மாணவி ஏ.சுபஸ்ரீ முதல் பரிசையும், அண்ணா பல்கலைக்கழக மாணவி எஸ்.ஸ்வாதி இரண்டாம் பரிசையும், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர் ஒய்.சாமிநாதன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இயற்பியல் பிரிவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் எம்.ராகுல்ராஜ் முதல் பரிசையும், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர் எஸ்.வி.சஞ்சீப் ஆகாஷ் இரண்டாம் பரிசையும், பனிமலர் பொறியியல் கல்லூரி மாணவி ஏ.அனிஷா மூன்றாம் பரிசையும் பெற்றனர். இந்த போட்டியில் அதிக மாணவர்கள் பங்கேற்ற கல்லூரியாக அண்ணா ஆதர்ஷ் கல்லூரியும், இரண்டாம் இடத்தில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தில் வேல்ஸ் கல்லூரியும் இடம் பெற்றன. முன்னதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சவுந்தரராஜப் பெருமாள் பேசுகையில், அணுசக்தியில் நிபுணத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவியல் துறைகளின் படிப்பில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் படித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் பணிபுரியவே விரும்புகின்றனர். ஆனால் இந்த துறையில் கூடுதல் ஊதியத்துடன் கூடிய ஏராளமான பணியிடங்கள் உள்ளன. மாணவர்கள் இந்தத் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.