திங்கள், மார்ச் 1, 2021

tamilnadu

img

குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்க.... மதுரையில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

மதுரை:
தமிழக சிறைகளில் பல்லாண்டு காலமாக குற்றம் நிரூபிக்கப்படாமல் ஏராளமான முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தண்டனை அனுபவித்து வருகின்றனர்; நீதிமன்றம் அளிக்கும் தண்டனைக் காலத்தைவிட அதிகமான நாட்களை சிறையில் கழித்துவிட்ட அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

மதுரையில் வெள்ளியன்று கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கநூற்றாண்டு நிறைவு விழா - மூத்த தோழர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.பால கிருஷ்ணன், முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது; 

சசிகலா பிரச்சனை
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, தண்டனைக்காலம் முடிந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீரென உடல்நலக்குறைவு எனக் கூறி மருத்துவமனைகளுக்கு மாறி மாறிகொண்டு செல்லப்படுகிறார். திடீரென அவருக்கு நோய் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. 

இதுகுறித்து கர்நாடக அரசும் தமிழக முதல்வரும் விளக்கம் அளிக்க வேண்டும். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்துவிட்ட பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும், இந்தப்பிரச்சனையில் மத்திய - மாநில அரசுகள், தமிழக ஆளுநர் பந்தாட்டம் நடத்தி வருகின்றனர்.  இப்போது பேரறிவாளன் விடுதலை குறித்து மேலும்சில நாட்கள் அவகாசம் கேட்கின்றனர். இவர்கள் மட்டுமல்ல, தமிழகசிறைகளில் குற்றங்கள் நிரூபிக்கப் படாமலே சிறுபான்மையினர் ஏராளமானோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளில் முறைகேடு
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில்பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்படாமல் மத்திய அரசின் கண்காணிப்பு ஏதுமின்றி நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அனைத்து ஸ்மார்ட் பணிகள் குறித்தும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.ங்கடேசன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுபற்றிதமிழக முதல்வரோ, உள்ளாட்சித் துறை அமைச்சரோ பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். ஸ்மார்ட்சிட்டி போல பொதுப்பணித்துறையில் ரூ.2ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் கடைசி நாட்களில்நிதி ஆதாரம் என்ற சட்டியைச் சுரண்டும்வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூழ்கடித்துக் கொல்லும் கொடுமை
முன்பெல்லாம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடலில் விரட்டுவது, தாக்குவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற அராஜகங்களை மேற்கொண்டனர். தற்போது கடலிலேயே மூழ்கடித்துக் கொல்லும் அளவிற்கு சென்றுள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியா - இலங்கை நட்புறவு மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து இலங்கை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்ட வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மதவாத, சந்தர்ப்பவாத, மக்கள்விரோத, அணிசேர்க்கையான அதிமுக - பாஜகவை தமிழக மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின்போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்இராமலிங்கம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ் ணன் ஆகியோர் உடனிருந்தனர். 

;