tamilnadu

img

டேக்வாண்டோவில் பதக்கங்களை அள்ளும் சக்தி!

டேக்வாண்டோ என்பது கொரிய நாட்டில் தோன்றிய ஆயுதம் இல்லாத தற்காப்புக் கலையாகும். இது தென் கொரிய நாட்டின் தேசிய விளையாட்டு.இது மற்ற திறன்களில் இருந்து தனித்து நிற்கிறது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் சர்வதேச விளையாட்டாகவும் தற்போது உருவெடுத்துள்ளது. இத்தகைய விளையாட்டுப் போட்டியில் பதினோராம் வகுப்பு மாணவி பி.சக்தி உலக அளவில் வெள்ளிப் பதக்கமும் இந்திய அளவில் பலமுறை தங்கமும் வென்று  தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். 7ஆம் தேதி  முதல் 9 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெறும் தேசியப் போட்டிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்த சக்தியை சந்தித்தோம். 

அலங்கரிக்கும் பதக்கங்கள்...

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில்  இதுவரை வென்று வந்த கோப்பைகள், தங்கம், வெள்ளி,  வெண்கலப் பதக்கங்கள், பாராட்டுச் சான்றுகளே ஒரு அறை முழுவதும் அலங்கரிக்கின்றன. விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் முதலிடம் தான் சக்தி. தமிழ்நாடு மாநில 34 ஆவது டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. மாநி லம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டோம். திருவள்ளூர் மாவட்டம் சார்பில் பங்கேற்ற நான், 55 கிலோ உடல் எடை  பிரிவு ‘கியோருகி’சண்டைப் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றேன். 68 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட எனது தோழி ஆர். சஹானாவும் தங்கப் பதக்கம் வென்றார். ‘பூம் சே’ என்று அழைக்கப்படும் குழு பிரிவு போட்டியில் இருவரும் வெண்கலப் பதக்கம்வென்றோம். இந்த வெற்றியின் மூலம் இருவரும், ஜூலை 7 முதல்  9ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடை பெறும் தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு மாநில அணிக்கு தேர்வு பெற்றோம் என்கிறார் சக்தி.

பட்டை தீட்டும் பட்டறை!

“சிறு வயது முதல் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகம் உண்டு. மற்ற  விளையாட்டை காட்டிலும் டேக்வாண்டோ வித்தியாச மாகத் தெரிந்தது. பொருளாதார ரீதியாக ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் எளிதில் பயிற்சி கிடைத்தது.  எனது விருப்பத்தை வழக்கறிஞரான எனது அம்மா  நிஷா, தனியார் துறையில் மென்பொருள் பொறியாள ராக பணியாற்றி வரும் அப்பா பிரசன்னா, தமிழ்நாடு சிறு- குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான எனது தாத்தா கிருஷ்ணசாமி, பாட்டி ரோகிணி ஆகியோரிடம் தெரிவித்தேன். அடுத்த நாளே பயிற்சியில் சேர்த்தனர்.  தினமும் பயிற்சி எடுப்பதால் நம்பிக்கையும் அதிகரித்தது. பதக்கங்கள் வென்றது படிப்புக்கும் உதவி யாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டால் அரசு வேலைக்கு வாய்ப்புள்ளது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது பயிற்சியை துவக்கிய நான், இவ்வளவு தூரம் பயணித்து சாதிப்பதற்கு முழுக்க முழுக்க மாஸ்டர் கோதண்டம் தான் காரணம்.  எனது திறமையை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை-மாலை இருவேளைகளிலும் மற்ற நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பயிற்சி கொடுத்து வருகிறார். அப்பாவுக்கு கடுமையான பணிச் சுமை இருந்த போதிலும், தினமும் என்னை பயிற்சிக்கு அழைத்துச் சென்று திரும்பவும் வீட்டுக்கு அழைத்து வருகிறார். வெளிநாடுகள், மற்ற மாநிலங்களில் நடக்கும் போட்டி களில் கலந்து கொள்ளும் போது எனக்கு துணையாக உடன் வருகிறார். அதுமட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடு களைச் சேர்ந்த வீராங்கனைகளுடன் விளையாடுவதற்கு சிறப்பு பயிற்சிகளையும் கொடுத்து வருகிறார்.  எனக்காக, கொரிய நாட்டின் பல்கலைக்கழக டேக்வாண்டோ விளையாட்டு இயக்குநரை சென்னைக்கு அழைத்து வந்து நவீன தொழில் நுணுக்கங்களையும் சிறந்த  ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்” என  விவரிக்கிறார்.

மறக்க முடியாதது

முதன் முதலில் மாவட்ட அளவில் கலந்து கொண்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். அதன்  தொடர்ச்சியாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று  ஏராளமான பரிசுகள் பதக்கங்கள் வென்று உள்ளேன். ஆரம்பத்தில் காரைக்குடியில் நடந்த போட்டியின் போது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆனால் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. கடினமாகப் போராடி அந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதை மறக்க முடி யாது. மாநில மற்றும் தேசிய அளவில் ஏராளமான பதக்கங்கள் குவித்தாலும் 12 நாடுகள் பங்கேற்ற சர்வதேச போட்டியில் விளையாடிய போது வெளிநாட்டு வீராங்கனைகள் பலரிடமும் கடும் சவால் கொடுத்து எதிர் தாக்குதல் தொடுத்து வெற்றி பெற்றேன். தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம், இந்திய டேக்வாண்டோ சம்மேளனம், தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்கம், தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணை யம், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் அனைத்தும் ஒன்றிணைந்து திருவாரூரில் நடத்திய ‘ஸ்டேட்  லெவல்’ போட்டியில் தங்கம் வென்றேன். அதுபோன்று நேஷனல் போட்டியில் தங்கம் வென்று ஆகஸ்ட்டில் நடை பெறும் இன்டர்நேஷனல் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்று கொடுப்பேன். ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவுக்கு ‘மெடல்’ வென்று கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் நம்பிக்கையோடு! அவரது விருப்பம் நிறைவேறட்டும்!

- சி. ஸ்ரீராமுலு


 

;