மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் வளர்ச்சி கருத்தரங்கம் கோவையில் நவம்பர் 1 அன்று நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் சீர்வளர் சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பங்கேற்று சொற்பொழிவாற்றினார். அவர் பேசுகையில், நவம்பர் 1 ஆம் தேதி தமிழ் வளர்ச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக மார்க்சிய பொதுவுடமை கட்சி தமிழ் வளர்ச்சி கருத்தரங்க மாக நடத்துவது பொருத்தமானது. நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு தினமாக கொண்டாடி வந்த நிலையில், இப்போது தமிழ் வளர்ச்சி நாளாக கொண்டாடுவது பொருத் தமானது. அதேநேரத்தில் தமிழக அரசு உள்ளாட்சி தினமாக அறிவித்து விடுதலை நாள், குடியரசு நாள் போன்று உள்ளாட்சிகளில் கூடும் நாளாக அறிவித்திருப்பது அடுத்த கட்ட வளர்ச்சிக்கானது. மூன்று அடுக்குகளாக அரசை ஆட்சி அமைப்பை கட்டமைத்துள்ளார்கள். மைய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பு என்று வகைப் படுத்தியுள்ளனர். உள்ளாட்சி நாளன்று கிராம சபை போல் நகர சபை கூடும் என்று அறிவித்திருப்பது சிறப்பானது. உலகில் 7 ஆயிரம் மொழிகள் உள்ளன. அதில், 2 ஆயிரம் மொழிகள் இந்தியாவில் உள்ளது. மைய அரசால் அட்ட வணைப்படுத்தப்பட்ட மொழிகள் 22. இதில், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால், “சாண் ஏறினால், முழம் சறுக்கும்” என்கிற நிலைதான் உள்ளது. இந்த கொள்கைகள் வளம் பெற வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற வேண்டும். இதன் மூலம் நாம் நமது தமிழ் மொழியை விரிவான வகையில் எடுத்து செல்ல வழிவகுக்கும்.
கட்டாய பயிற்றுமொழி
முதலில் 11 ஆம் வகுப்பு வரை கட்டாய தமிழ் என்பது இருந்தது. பின்னர், அது எட்டாம் வகுப்பு வரை என்றாகி, பிறகு ஐந்தாம் வகுப்பு என்றானது. இப்போது தமிழகத்தை பொருத்த வரையில் சிறுபான்மை மொழி யல்ல. தமிழ் மொழியை கற்காமலேயே பட்டம் பெற முடியும் என்கிற அவல நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். தமிழ் கட்டாய பயிற்று மொழியாக அமைய வேண்டும். தமிழிலே முடியாதது ஏதுமில்லை. சமீபத்தில் மைய அரசும் கூட நாங்கள் பொறியியல், மருத்துவம் ஆகிய வற்றை தாய் மொழியிலேயே கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்கிறார்கள். ஆனால் அது நடை முறைப்படுத்தப்படவில்லை. ஆனால் மற்ற நாடுகளில் இது சாத்தியமாக உள்ளது. ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் தாய் மொழியில்தான் கற்க முடியும் என்கிற நிலை உள்ளது. இங்கிருந்தும் சிலர் மருத்துவம், பொறி யியல் படிக்க மேலை நாடுகளுக்கு செல்கிறார்கள். இங்கே மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் ஐந்தாண்டு படிக்க வேண்டும். ஆனால், அயல் நாடுகளில் ஐந்தரை ஆண்டுகள் படிக்க வேண்டும். காரணம் ஆறு மாதம் கட்டாயம் அந்த நாட்டின் தாய் மொழியை கற்றுத்தேற வேண்டும். பின்னர்தான் அந்த மொழியில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளை படிக்க முடியும். யாரெல்லாம் எங்கள் நாட்டிற்கு மருத்துவம், பொறியி யல் படிக்க வருகிறீர்களோ அவர்களுக்கு அவர்களின் சொந்த நாட்டிலேயே எங்கள் மொழியை கற்று தருகிறோம். இதனை கற்றுக்கொண்டு பட்டப்படிப்புக்கு எங்கள் நாட்டிற்கு வாருங்கள் என்கிறார்கள். அப்படியான சான்றிதழ் வகுப்புகள் அங்கு நடைபெற்று வருகிறது.
தவறான சிந்தனை
ஆனால் நமது குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் 1 ஆம் வகுப்பு முதல் தமிழ் உள்ளிட்ட எந்த மொழியில் படித்தா லும், அயல் நாடு சென்று அவர்களின் தாய்மொழியை கற்று அதில் பட்டம் பெற முடியும் என்றால், ஏன் நமது தாய்மொழியாம் தமிழிலே அதனை கற்றுக் கொடுக்க முடியாது என்கிற கேள்வியை முன்வைக்க வேண்டியுள்ளது. நமது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவாளி ஆக முடியும் என்கிற தவறான சிந்தனையை போக்க வேண்டும். இதனால் குழந்தை பருவத்திலேயே தாய் மொழி பற்றின்மை உருவாகுகிறது. தாய்மொழியே தெரியாமலும், அயல் மொழியை கற்க முடியாமலும் திணறுகிறார்கள். நமது மக்களிடையே தமிழிலேயே படிக்க முடியும் என்கிற சிந்தனையை உருவாக்க வேண்டும். நோபல் போன்று பெரிய பரிசுகளை பெறும் அறிஞர்களி டம் இரண்டு கேள்வி ஆங்கிலத்தில் கேட்டால் அவர்கள் திணறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் சாதித்தது அனைத்தும் அவர்களுடைய தாய்மொழியிலேயே என்பது தான். ஆனால் நாம் என்ன சொல்கிறோம், நமது குழந்தை களிடம் தாய்மொழி வேண்டாம் என்று ஆங்கிலம் கற்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறோம். அப்போதுதான் மிகப்பெரிய அறிவாளி ஆக முடியும் என்ற கற்பிதத்தை உருவாக்குகிறோம். ஆனால் உண்மையில், தாய் மொழி யின் மீது யாருக்கு அக்கறை இல்லையோ, அல்லது தாய் மொழியில் சரியாக கற்கவில்லையோ அவர்களால் மேற்படிப்பு தொடர முடியாது என்பதுதான் உளவியல், கல்வியியல் முடிவாக இருக்கிறது. ஆகவே நமது தாய்மொழியிலேயே நமது கல்வி அமைய வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆகவே தான் பயிற்று மொழி, வழிபாட்டு மொழி போன்ற கருத்தரங்கங்களை நடத்தி வருகிறோம். நமது சிந்தனை தமிழிலேயே இருக்க வேண்டும். அயல் மொழியில் கல்வி கற்கும்போது முதலில் அந்த குழந்தை யின் சிந்தனையை மழுங்கடிக்கிறோம். இதனையடுத்து அவர்களை இயந்திரமாக மாற்றி விடுகிறோம். இதனைத் தான் ஆங்கிலேயேர்களும் விரும்பினார்கள். ஆகவே நமது சிந்தனை கல்வியை பறித்துவிட்டு மெக்காலேவின் அடிமைக்கல்வியை நமக்கு புகட்டினார்கள்.
தமிழ்வழி படித்தவர்களுக்கு கூடுதல் விழுக்காடு தருக!
தமிழ் வழியிலேயே கற்க வேண்டும் என்பதற்காக காமராஜர், சி.சுப்பிர மணியம், அவிநாசிலிங்கம் போன்றோர் பள்ளிகளை திறந்து முயற்சி மேற்கொண்டார்கள். இதற்கு பிறகு ஆங்கில வழியிலே கல்வி கற்பிக்கலாம் என்கிற உத்தரவை போட்ட பிறகு தற்போது போட்டி போட்டுக்கொண்டு ஆங்கில வழி கல்விச் சாலையை திறந்து வருகிறார்கள். இதன்காரணமாக அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் துவக்குவதும் அதிகமாகி தற்போது மக்களின் வரிப்பணத் திலேயே நமது குழந்தைகளுக்கு அயல் மொழிக் கல்வி கற்றுக்கொடுத்து கொண்டிருக்கிறோம். தமிழக பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கணக்கை எடுத்துக்கொண்டு அதில், எத்தனை விழுக்காடு மாணவர்கள் தமிழில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை விழுக்காடு ஆங்கிலத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை கணக்கெடுத்தால், ஐம்பது விழுக்காடு ஆங்கில மொழியில் படிக்கிற குழந்தைகளாகத்தான் இருந்து கொண்டிருக் கிறார்கள். நம்முடைய வரிப்பணம் என்னவாகிறது என்றால் அயல்மொழி கற்றுக்கொடுக்கிற ஆசிரியர்களுக்கு ஊதிய மாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். தமிழில் கல்வி கற்பதற்கான சிந்தனையை இன்னும் ஊக்குவிக்கவில்லை என்று அர்த்தம். பல மாநிலங்களில் அவரவர் மொழிகளில் படித்தவர்களுக்கு வேலை உள்ளிட்டவைகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. நமது தமிழகத்தில் 20 விழுக்காடு அதுவும் சில எல்லையை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். இந்த விழுக்காட்டை அதிகப்படுத்த வேண்டும். எப்பொழுது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட வைகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறதோ அப்பொழுது தான் தமிழ் வழியிலே படிக்க வேண்டும் என்கிற ஊக்கம் வரும்.
தமிழில் அர்ச்சனை புதிய ஆலோசனை
வழிபாட்டு முறையில் தமிழ் இருக்க வேண்டும் என்று சொல்வது இன்று, நேற்று சொல்லக்கூடியது அல்ல. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். 1953 இல் போராட்டத்தை முன் எடுத்தோம். இதனைத்தொடர்ந்தே பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தமிழில் வழிபாட்டு முறையை கொண்டு வந்தோம். இதனைத்தொடர்ந்து 1961 இல் அரசு தமிழ் அர்ச்சனை என்பதை அரசு அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் நடைபெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றுவரை அனைத்து கோவில்களிலும் தமிழில் வழிபாடு நடைபெறுகிறதா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. பல கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யத் தெரியாது என்கிறார்கள். வடமொழியில் தான் அர்ச்சனை செய்வோம் என்கிறார்கள். இந்து அறநிலையத்துறை தமிழில் அர்ச்சனை செய்பவர் களுடைய பெயர், செல்போன் எண் ஆகியவற்றை கட்டாயம் அனைத்து கோவில்களிலும் குறிப்பிட வேண்டும் என தெரி விக்கப்பட்டது. ஆனால், அதுவும் நடைமுறையில் இல்லை. தமிழிலே கட்டாயம் அர்ச்சனை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையில் நான் உறுப்பினராக இருப்பதால் அதில் ஒரு ஆலோசனையை முன் வைத்திருக்கிறேன். கோவில்களில் அர்ச்சனைச் சீட்டு இரண்டு ரூபாய் அதில் 50 விழுக்காடு அர்ச்சகரை போய்ச் சேரும். ஆகவே நான் வடமொழியில் அர்ச்சனை செய்தால் 50 விழுக்காடு பங்கு கொடுத்துவிடலாம். அதே நேரத்தில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால் ஒன்றரை பங்கு தருகிறோம் என அரசு அறிவித்தால், பல மாற்றங்கள் நிகழும் என்கிற முன்மொழிவை கொடுத்துள்ளேன். இன்னும் இது அரசின் பரிசீலனை நிலையிலேயே உள்ளது.
தமிழ்ப்பெயர் சூட்ட மறுப்பதா?
இதேபோன்று நம்முடைய பெயர்கள் முடிந்த அளவுக்கு தமிழ் பெயர்களாக இருக்க வேண்டும். அயல்மொழி பெயர் களை பெரும்பாலும் வைத்துக்கொள்கிறார்கள். பழனிச்சாமி, மருதாச்சலம் போன்ற பெயர்களை வைப்பார்கள். இப்படி யான பெயர்கள் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தும். சுவாமிநாதன் போன்ற பெயர்களை வைத்தால் இவர் தஞ்சாவூர் பக்கம் என தெரியவரும். அந்தந்த வட்டாரத்தை அடையாளப்படுத்துவ தாக நம்முடைய பெயர்கள் இருக்கும். இப்பொழுது நாம் குழந்தைகளுக்கு வைக்கக்கூடிய பெயர்களை பார்த்தால் அந்த பெயர்கள் நமக்கும் புரிவ தில்லை. சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும் அந்த பெயரின் பொருள் தெரிவதில்லை. இமயம் முதல் குமரி வரை தேசிய சிந்தனையோடு இருக்கிறோம். ஆகவே வடமொழி பெயரை வைத்தால் என்ன தவறு என கேட்கிறார்கள். இதே வட மொழியில் உள்ளவர்கள் முருகன் என்றோ செந்தில் என்றோ பெயர் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை. யாரோ ஒருவர் இத்தனை எழுத்தில் தான் பெயர் இருக்க வேண்டும். இந்த எழுத்து தான் முதலில் வரவேண்டும் என்று சொல்வதை கேட்டால், நாம் முன்னேற முடியாது. அது நம்முடைய குழந்தைகளுக்கான அடையாளத்தை மறுப்பதாகும். அது நமக்கு மிகப்பெரிய கேடாக மாறும். இன்று கூட ஜெர்மனி போன்ற நாடுகளில் குறிப்பிட்ட பெயர்களின் பட்டியல் இருக்கும். அந்த பெயர்களை மட்டும் தான் வைக்க முடியும். வீட்டில் என்ன பெயர் வேண்டுமானாலும் செல்லமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் பட்டியலில் என்ன பெயர் சொல்கிறார் களோ அந்த பெயரை தான் நாம் வைக்க முடியும். இங்கோ நாம் குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்ட மறுக்கிறோம்.
அதேபோன்று வணிக நிறுவனங்கள் பெயரை வைக்கும் போது மூன்று பங்கு அளவு தமிழில் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு இந்தி, ஆங்கிலத்தில் இருக்கலாம் என்பது அரசின் ஆணை. ஆனால், அந்த நடைமுறை பின்பற்றப்படு வதில்லை. தமிழே இல்லாமல் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. ஆனால், கர்நாடக மாநிலத்திற்கு சென்றால் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்களும் அவர்கள் மொழியிலேயேதான் இருக்கும். அதேபோன்று ஊழியர்கள் தமிழிலேயே கையொப்பம் இட வேண்டும் என தமிழக அரசின் ஆணை இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் சில தமிழ் ஆசிரியர்களே ஆங்கிலத்தில் தான் கையொப்ப மிடுகிற அவலம் இருக்கிறது. நம்முடைய தமிழுக்கு மட்டும்தான் முத்தமிழ் என்று சொல்கிறோம். இயல், இசை, நாடகம் என்கிறோம். நமது சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்கிற கூடிய இலக்கியங் களில் ஆற்றுப்படையில் பெரும்பாலானவை இசை சார்ந்த தாக இருக்கிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கக்க கூடிய இந்த நூலில் 200, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருத்தர் இசைத்ததையே பயன்படுத்தி வருகிறோம்.
நீதிமன்றத் தமிழ்
நீதிமன்றத்தில் தமிழ் இருக்க வேண்டும். வழக்கு தொடுப்பவரும், வாதிடுபவரும் தமிழிலேயே வாதிட வேண்டும். ஊடகங்கள் பெரிய தாக்கத்தை உருவாக்கு கிறது. ஆனால் அதில் உரையாடுபவர்கள் குறைந்தது 70 விழுக் காடு ஆங்கிலமாக தான் இருக்கிறது. பிறமொழிச் சொற்க ளாகவே இருக்கிறது. இந்த தாக்கமும் நம்மிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. நாம் நாலு வார்த்தை பேசச்சொன்னால் மொழி கலப்பில்லாமல் பேச முடியவில்லை. பிற மொழியைச் சேர்த்து தான் பேசுகிறோம். இப்படியே போனால் நமது மொழி இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. நமது வீட்டில் நமது தாயை நடு வீட்டில் நாற்காலியில் அமர வைத்து வருகிற நண்பர்களிடமெல்லாம், இது என் தாய், என்னை சீராட்டி, பாராட்டி, பாடுபட்டு வளர்த்தவள் என்று சொல்வோம் என்றால், நாம் நமது தாயை பெருமைப்படுத்து கிறோம். அம்மாவை நாம் மதிக்கிறோம் என்று பொருள். ஆனால் தாயிடம் சென்று என்னை பார்ப்பதற்கு நண்பர்கள் வருகிறார்கள். இங்கே இருக்காதே அறையில் போய் ஒளிந்து கொள் என்று சொன்னால், நம்முடைய தாயின் மனது எப்படி இருக்கும்? நமது தாயின் மீது நம்முடைய மதிப்பு என்ன? கல்வியில், வழிபாட்டில், இசையில், ஊடகங்களில், நீதி மன்றத்தில் தமிழ் இல்லை என்றால், நம் தாயை நாம் ஒதுக்கி விடுகிறோம் என்பதுதான் பொருள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதற்கான கோட்பாட்டை சிந்திக்க வேண்டும். முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மைய அரசு மொழியை திணிப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். அதேநேரத்தில் நமது தாய்மொழியை நமது அனைத்துத் துறைகளிலும் முன்னெ டுத்துச் செல்ல வேண்டும். அதற்கான முன்னெடுப்பை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்.