tamilnadu

img

4000 செராமிக் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்

கடலூர்,செப்.23- கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பணியாற்றி வரும் 4,000 செராமிக் தொழிலாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அமைச்சர்களிடம் வலியுறுத்தினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செராமிக் தொடர் சுடுசூலை ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இயங்கி வந்தது. இதன் மூலம் விருத்தாசலம் சுற்றியுள்ள சுமார் 4,000க்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பெற்று வந்தனர்.  அதிக வெப்பத் திறன் கொண்ட ஜெர்மன் தொழில்நுட்பத்தை தொடர் சுடுசூலையை சில நபர்கள் தங்களது சுய லாபத்திற்காக அதிகாரிகளின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடிவிட்டனர். பிறகு, சொந்தமாக தொடர் சுடுசூலை நிறுவிய அந்த நபர்கள் லாபம் ஈட்டி வருகிறார்கள்.  ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் இயங்கிய தொடர் சுடுசூலையை மீண்டும் இயக்குவதற்கு சிட்கோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக, செராமிக் தொழிலில் 55 ஆண்டு காலம் அனுபவம் வாய்ந்த, வாடகை பாக்கியும், அரசுக்கு எந்தவித நிலுவைத் தொகையும் இல்லாத 10 பேரை கண்டறிந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுவதற்காக சாவி ஒப்படைக்கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது இதற்கான நிதி ரூ. 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிதி 10 பேருக்கு மட்டும் ஒதுக்கக் கூடாது என்று சிலர் திட்டமிட்டு தடுத்து வருகிறார்கள். 

அந்த நபர்கள் அரசு சார்பில் இயங்கி வந்த இரண்டு தொடர் சுடுசூலைகளை நட்டம் என்று மூடியவர்கள். இவர்களுக்கு தனியாக சுடுசூலை தனியாக உள்ளது. எனவே, ஜெர்மன் தொழில்நுட்பத்தில் அரசு சுடுசூலை இயங்கினால் தங்களது சுடுசூலை முடங்கி விடும் என்ற சுய நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியிலுள்ள செராமிக்ஸ் தொழிற்பேட்டையில் 4000 தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோரை சந்தித்த சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை வி.பி. மாலி மனு ஒன்றையும் அளித்தார். கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.அசோகன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாலி அளித்த அந்த மனுவில், செராமிக் தொழிற்சாலை அமைக்கும் இந்த பிரச்சனையில் அமைச்சர்கள் உடனடியாக தலையிட வேண்டும்.  ஏற்கனவே சிட்கோ நிர்வாகம் தீர்மானித்த 10 நபர்களிடம் இந்த தொடர் சுடுசூலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், செராமிக் தொழில் செய்வதற்கே தொழிற்பேட்டை உருவாக்கப் பட்டது. அதற்கான தொழில்நுட்பக் கல்லூரியும் அங்கே இயங்கி வருகிறது. எனவே, இதற்காக ஒதுக்கப்பட்ட 41 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கரில் ஏற்கனவே கட்டிடம் கட்டப்பட்டு தொழில் செய்து வருகிறார்கள். மீதம் இருக்கக் கூடிய நிலத்தை தொழிற்பேட்டையில் செராமிக் தொழில் செய்பவர்களுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த தொழிலை நம்பி  குடிசைத் தொழில் செய்து வருவோருக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

;