tamilnadu

img

திரைப்பட அறிமுகம் ஜெயில் - இரா.தெ.முத்து

விருதுநகரின் வெயிலை, தேரிக்காடுகளை திரையோவியமாக எடுத்த  இயக்குநர் வசந்தபாலன் , சென்னை ரங்கநாதன் தெருசார் அடுக்கக விற்பனை அங்காடித் தொழிலாளர்களின் வாழ்வை காட்சிப்படுத்தி சமூகத்தின் மனசாட்சியாக நின்றார்.அடுத்து சில படங்களுக்குப் பிறகு இம்முறை ஐடி தொழில் வளாகங்கள் நிறைந்த பழைய மாமல்லபுரசாலையின் கிழக்குத்திசை யில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்ட நவீனச்சேரியாக ஒதுக்கப்பட்ட ‘கண்ணகி நகர்’ மக்களின் வாழ்வை விவாதிக்கும் ஜெயில் படத்தோடு வந்திருக்கிறார். கண்ணகிநகர் வாழ்வு திரைப்படத்தில் காவேரிநகராக புனையப்பட்டுள்ளது.சூழலும் மக்களின் வாழ்வும் வலியும் உண்மையாக ஒளிர்ந்து உலகுதழுவிய மனசாட்சியை கோரி நிற்கின்றது ஜெயில். சென்னை பெருநகரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்க்கைப்பாடுகளுக்கான தொழில்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு,  கொண்டு கொட்டப்பட்ட இடங்களில் மருத்துவமனை, கல்விச்சாலைகள், தொழில் ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் திறந்தவெளிச் சிறைச்சாலையாக  கண்ணகி நகர், செம்மஞ்சேரி,பெரும்பாக்கம் போன்ற அடுக்கக சேரிகள் தோற்றங் காட்டுவதை நான்கு குடும்பங்களை கொண்டு அதனதன் பாத்திரங்களொடு நிலத்தை, நிலத்தின் பொழுதுகளை அரசு எந்திரத்தின் உள்ளூர் முகங்களை காட்சிப்படுத்துகிறது ஜெயில்.

ப்ரிவியூ காட்சியில் பார்த்த நவீன தோற்றங் கொண்ட திரைப்படக் கலை ஞர்கள் பட்டணம் ரஷீத்தின் ஒப்பனையில் அசல் சென்னைச்சேரியின் கறுத்து களைத்த கலரிங் முடி கொண்ட கர்ணா,ரோசாமலர்,பாப்பம்மா,ராக்கி, கலை, ராணி,மாணிக்,முத்துக்கருப்பன், மரியபுஷ்பம் போன்ற பாத்திரங்களாக திரையில் வாழ்கிறார்கள். நண்பன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து அவனை மீட்டுக் கொண்டு வர,  ரோசாமலரின் நாஷ்டா கடைக்கு அவளின் திருமணத்திற்கு உதவ என சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபடும் கர்ணா போன்ற இளைஞர்களின் வாழ்வைப் புரிந்து கொள்ளாமல் பலி கொள்ளும் உள்ளூர் அதிகாரவர்க்கம்,  தனது பெருங்கொள்ளைகளுக்காக தனது தேவைகளுக்காக காவேரிநகரை சென்னையை போதை நகராக்கி பணம் பார்ப்பதை பொதுவிசாரணைக்கு கொண்டு வந்திருக்கிறார் வசந்தபாலன். சென்னையின் பூர்வீகக் குடிகளின் வாழ்வென்பதால் அவர்களின் மொழி அவர்களின் கானா அவர்களின் மயானக்கொள்ளை நுட்பமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பாக்யம்சங்கர் மெட்ராஸ் பேசுமொழியை அனாசயமாக எழுதி இருக்கிறார்.கானா கணேஷ் கிறங்கடிக்கிறார்.ராப் எனும் சொல்லிசைப் பாடலை அறிவு எழுத கவிஞர்கள் கபிலன், சினேகன் ஏனையப் பாடல்களை எழுதியிருக்கின்றனர். கண்ணகிநகரின் டாப் ஆங்கிள்கள், குறுகலான அதன் குடியிருப்பு வராண்டா, பத்துக்கு பத்து வீட்டின் தோற்றம், இரவுப்பொழுது என தன் ஒளிப் பதிவால் படத்திற்கான அழகை கணேஷ் சந்திரா கூட்டியிருக்கிறார்.சுரேஷ் கல்லோரி இயல்பான இடங்களை அசலான இடங்கள் காட்சிகளாக மாறு வதற்கான நுட்பத்தை செய்திருக்கிறார். இந்தாக் கெழவி உம் புள்ளை கையில் சொல்லி வை, இல்லேன்னா கைமாதான் என்று சீறும் அந்த மாணிக் பாத்திரம் செம்ம டெரர்.ஏண்டா சிரிச்சீங்க சொல்லுங்கடா,அடிக்க மாட்டேன் என கேட்டு மூலவியாதியை விவரித்து ,தனக்கா னது உள்மூலம் என பகிர்ந்து கொண்டு கைதிகளை விளாசித்தள்ளும் சுட்டுக் கொல்லும் ரவிமரியா தனது இன்ஸ்பெக்டர் பாத்திரத்தின் கொடூரத்தை கொண்டு வந்திருப்பதில் வெற்றி பெற்றுவிட்டார்.

அம்மாவை ,ராக்கியை இழந்த கர்ணா கலையை சாகவிட விரும்பாமல் இன்ஸ்பெக்டர் பெருமாளின் ரிவால்வர் குறிபார்த்த இரவில் நண்பனை பாது காக்க ஒட்றா ஓடிப் போடா என விரட்டி விட்டு துப்பாக்கிக்குண்டிற்கு பலியாகும் ஜீ.வி.பிரகாஷ்குமார் தனது நாயகப்பாத்திரமான கர்ணாவை ஏற்று சென்னை சேரிப்பையனாக வாழ்ந்திருக்கிறார். ப்ரவுன் சுகர் இன்ஸ்பெக்டரை சிபிசிஐடி போசிலில் சிக்க வைத்து விட்டோம் என ஆசுவாசம் கொள்ளும் கர்ணா கலை மீது தெருவில் விழும் கரியநிழல் உருவம்  படர்ந்து நீளும் கொடூரத்தால் காவேரிநகரின் தெரு ஒன்றில் சுட்டு வீழ்த்தப் படும் கர்ணாக்களுக்கான விடிவுகாலம் எப்போது என்று படம் பெரிய கேள்வியை எழுப்புகிறது. காவேரிநகர் மக்களின் குறைகளை அநீதிகளை பொதுமன்றத்திற்கு கொண்டு சென்று, கொண்டாடப்படும் சிவப்புச்சட்டை கதாபாத்திரம் முத்துக் கருப்பன் மனங்கவர்கிறார்.இவர்தான் படத்தின் முதல்பிரதி தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார்.

நைந்த பழைய புடவைகளுக்கு இஸ்திரிப் போட்டு வீடு வீடாக கவர்பால் போடும்  கர்ணாவின் அம்மா பாப்பம்மாள் பாத்திரத்தில் ராதிகா பாசத்தைக் கொட்டி இருக்கிறார். நாஸ்டா கடை ரோசாமலர் , கலர் பிகர் என்று ஜொள் விட்டால் அவ்வளவு தான் அரிவாளால் வகுந்து விடும் துணிவும் கண்களில் காதலும் மிளிரும் பாத்தி ரத்தில் பொருந்துகிறார் நாயகி அபர்நதி. ராதிகா சரத்குமார், ராணி பாத்திரத்தின் அப்பாவி முகத்திற்கான நல்ல தேர்வு. மொத்தப் படத்தையும் தூக்கிநிறுத்தும் பின்னணி இசைக்கும் கவனிக்க வைக்கும் பாடல்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ்குமார் பொறுப்பேற்று நாயகனாகவும் அசத்துகிறார். எஸ்.ராமகிருஷ்ணன்,வசந்தபாலன் இணைந்து கதை எழுத , உரையாடலை பாக்யம் சங்கரோடு பகிர்ந்து எழுதி இருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். படத்தின் தயாரிப்பை ஏற்று சிரமங்களுக்கு இடையில் திரையரங்கிற்கு கொண்டு சேர்த்த  ஸ்ரீதரன் மரியதாசன் வணக்கத்திற்குரியவர். கவனிக்க வேண்டிய, விவாதிக்கப்பட வேண்டிய படம் ஜெயில்.

;