tamilnadu

img

வெல்லப்பாகு... ஏலக்காய்... அலாதி வாசனை!

ச.நல்லேந்திரன்

 1970-ஆம் ஆண்டுகளில் ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா, ஐந்து பைசா நாணயங்களை பார்த்திருக்கிறேன். நான் பள்ளிக்குச் செல்லும் போது ஒரு பைசா, இரண்டு பைசா என எனது தந்தை பிரித்துக்கொடுப்பார். என்றாவது ஒரு நாள் ஐந்து பைசா கொடுப்பார். அன்றைக்கு நான் படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது. அதே காலத்தில் பள்ளியிலிருந்து  மதுரை அழகர்கோவிலுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வார்கள். பள்ளிப் பேருந்தில் சென்று திரும்புவதற்கு கட்டணம் 50 பைசா தான். அழகர்கோவிலுக்கு சுற்றுலா செல்லும் நாள் அறிவிக்கப்படும். அதற்கு சில தினங்களுக்கு முன்பே நான் தயாராகிவிடுவேன். என் அப்பா-அம்மாவிடம் அழுது எப்படியாவது 75 பைசா வாங்கி விடுவேன். அதில் முழு 25 பைசாவை எடுத்துக்கொண்டு மதுரை பாரதியார் ரோட்டில் இருந்த சிலோன் சிட்டி ஸ்டோருக்குச் சென்று 25 பைசாவிற்கு விற்ற கடலைமிட்டாய் பாக்கெட்டை வாங்கிவைத்துக்கொள்வேன். சக மாணவர்கள் 25 பைசாவிற்கு கடலை மிட்டாய் வாங்கிய என்னைப் பார்த்து நீங்கள் எல்லாம் பணக்காரர்கள் என்பர். அன்றைக்கு சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள் அதிகபட்சமாக ஐந்து பைசா தான் கொண்டு வருவார்கள். இரண்டு பைசா கொடுத்தால் கை நிறைய நெல்லிக்காய். அப்போது எண்ணிக்கையெல்லாம் கிடையாது. மூன்று பைசாவிற்கு குத்து மதிப்பாக கையில் அள்ளி கடுக்காய் பழமும், இலந்தை பழமும் தருவார் பள்ளிக்கூட வாசலில் அமர்ந்திருக்கும் பாட்டி. ஒரு பைசாவில் தொடங்கிய கடலை மிட்டாய் இன்று இரண்டு ரூபாய்க்கு விற்கிறது. இந்தக் கடலை மிட்டாயின் தாயகம் தமிழகம் தான். தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில ஏராளமான கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. 1940-ஆம் ஆண்டுகளில், கோவில்பட்டியைச் சேர்ந்த பொன்னப்ப நாடார் என்பவர் சிறிய ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்துள்ளார். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் நிலக்கடலையுடன் வெல்லத்தை தூளாக்கி சேர்த்து அதை சிறு உருண்டைகளாக பிடிப்பதைப் பார்த்துள்ளார்.

இப்படி தயாரிக்கப்படும் நிலக்கடை-வெல்லம் சேர்க்கப்பட்ட உருண்டை ஓரிரு நாட்களுக்கே நன்றாக இருக்கும். இதை நீண்ட நாட்கள் வைத்திருப்பதற்கான  முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார் பொன்னப்ப நாடார். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்துள்ளார். குறிப்பிட்ட நிலைத்தன்மைக்கு வெல்லம் வந்தவுடன் (பாகு நிலை)அதனுடன் சிறு ஏலக்காயைச் சேர்த்துள்ளார். பின்னர் வெல்லப் பாகுடன் நிலக்கடலையை சேர்த்துள்ளார். பின்னர் இந்தக் கலவையை பேப்பர்களில் கொட்டி ஆற வைத்துள்ளார். பின்னர் சிறு சிறு துண்டுகளாக்கி உள்ளார். இப்படி உருவானது தான் கடலை மிட்டாய். அப்போது ஒரு சிறிய கடலை மிட்டாய் விலை ஒரு பைசா மட்டுமே. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்  தினமும்  30,000 கிலோ கடலை மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கடலை மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.  சுமார் 5,000 குடும்பங்கள் நேரடியாகவும், 15,000 குடும்பங்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளன. கோவில்பட்டியில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றால் வெல்லம் சூடாக்கப்படும் போது உருவாகும் வாசனை, ஏலக்காயை சேர்த்த பிறகு உருவாகும் வாசனை அலாதியானது. 2020- ஆம் ஆண்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புவிசார் குறியீட்டை 45 நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. 24 பேர் தனிப்பட்ட முறையில் புவிசார் குறியீடு பெற்றுள்ளனர். தவிர குடிசைத் தொழிலாக நடைபெறும் கடலை மிட்டாய் தயாரிப்பை கடலை மிட்டாய் உற்பத்தி மற்றும் சில்லரை வியாபாரிகள் சங்கம் கண்காணித்து தரத்தை உறுதி செய்கிறது. கடலை மிட்டாய் தயாரிப்பிற்காக  சேலம், தேனியில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது. மிட்டாய்க்கு சுவையை கூட்டுவது நிலக்கடலை தான். கோவில்பட்டி கடலை மிட்டாய் சாதனை படைப்பதற்குக் காரணம் இப்பகுதி மண், அல்லது வறண்ட கால நிலை, அல்லது தண்ணீர்.

இவற்றில் ஏதோ ஒன்று தான் காரணமாக இருக்கவேண்டும் என்கிறார் விஜய்குமார் என்னும் நிலக்கடலை வியாபாரி. மேலும் அவர் கூறுகையில், கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கழுகுமலை, சாத்தான்குளம், அருப்புக்கோட்டை பகுதிகளில் விளையும் நிலக்கடலையில் எண்ணெயை விட இனிப்புச் சத்து அதிகம். எனவே இந்தப் பகுதி நிலக்கடைலை   மிட்டாய் தயாரிப்பிற்கு ஏற்றது, நிலக்கடலை  தினசரி கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெறுவதால் இந்தப் பகுதியில் தான்  இது சாத்தியம். அது தான் கோவில்பட்டியின் சிறப்பு.  ஒரு வட்டாரத்தில்  ‘ஆடிப் பட்டம்’, மற்றொரு வட்டாரத்தில் ‘ஆவணிப் பட்டம்’, மற்றொரு வட்டாரத்தில்  ‘புரட்டாசி பட்டம்’  என்ற அடிப்படையில் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தயாரிப்பதற்காக தினமும் 20 ஆயிரம் கிலோ நிலக்கடலை வாங்கப்படுகிறது என்றார். முன்பெல்லாம் நிலக்கடலையை வாங்கி அதைச் சுத்தம் செய்து பருப்பை பிரிப்பதற்கு பல மணி நேரம் ஆகும். இதனால் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் பயனடைந்தனர். இப்போது உடைத்தல், தோலை அகற்றுதல் மற்றும் வறுத்தல் இயந்திரமயமாகிவிட்டது. வெல்லம் பாகு தயாரிப்பு, நிலக்கடலையைக் கலந்து, உருட்டுவது, வெட்டுவது ஆகியவற்றில் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பெரிய களிமண் அடுப்புகளில், வெல்லப்பாவு தயாராகிறது. இதற்கு தீக்குச்சியின் கழிவுகள் எரி பொருளாகப் ஈடுபடுத்தப்படுகிறது. தற்போது கடலை மிட்டாய் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

1999-ஆம் ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை (80 கிலோ) ரூ.450க்கு விற்றது. இப்போது ரூ.8,800 ஆக உள்ளது. ஒரு கிலோ வெல்லம் ரூ.10-க்கு விற்றது. இப்போது ரூ.100-ஐ தொட்டு நிற்கிறது. மொத்தச் சந்தையில் ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.150க்கு விற்கப்படுகிறது. உள்ளூர் வாடிக்கையாளர்களை விட, வெளிநாட்டில் இருந்து வாங்குபவர்கள் ‘நாட்டுச்சக்கரை’ மற்றும் பனை வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஆர்கானிக் கடலை மிட்டாய்களை தற்போது கேட்கின்றனர். ஆர்கானிக்  கடலை மிட்டாய்களுக்கு சௌதி அரேபியாவில் கிராக்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏ.ஸ்வர்ணலதா கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் மூப்பன்பட்டியில் மிட்டாய் தயாரிப்பதற்கென பிரத்யேகமாக  தனி வளாகம் அமைப்பதற்காக நிலம் தேடும் பணி நடைபெற்று வருகிறது. 20 மிட்டாய் உற்பத்தியாளர்களைக் கொண்ட கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, அவர்கள் நிலத்தை வாங்க உள்ளனர். தயாரிப்பு முழுவதும் இயந்திரமயமாக்கப்பட உள்ளதால், இயந்திரங்கள் மற்றும் கட்டடத்திற்கான நிதியை தமிழக அரசு வழங்கும். இந்தத் திட்டத்திற்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது என்றார். கோவில்பட்டி கடலை மிட்டாயை ஒன்றிய  அரசு  மதிய உணவு திட்டத்தில் சேர்ந்து தினம்தோறும் குழந்தைகளுக்கு வழங்கவேண்டும்.  கோவில்பட்டியில் எஃப்எஸ்எஸ்ஏஐ அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தை அரசு நிறுவ வேண்டும்.  இப்போது மிட்டாய் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை சோதனை செய்து சான்றிதழ் பெற மதுரைக்கு செல்ல வேண்டியுள்ளது என்கிறார் மிட்டாய் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கண்ணன்.

 

;