tamilnadu

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் மோடி அரசு அராஜகம்! சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் மோடி அரசு அராஜகம்! சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

புதுதில்லி, பிப். 3 - மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதற்கு அனுமதி மறுப்பதை எதிர்த்துப் போராடியதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு. வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களை, இடைநீக்கம் செய்து, ஒன்றிய பாஜக அரசு  அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. மோடி அரசின் இந்த ஜனநாயக விரோத  நடவடிக்கையைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், நாடா ளுமன்ற வளாகத்திலேயே எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவா தத்தில் திங்கட்கிழமையன்று கலந்து கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள் ளதாக முன்னாள் ராணுவத்தளபதி எம்.எம். நரவனே, புத்தகம் ஒன்றில் எழுதி யிருப்பது பற்றி கேள்வி எழுப்பினார். ஆனால், இந்த விவகாரத்தைப் பேசுவ தற்கு ராகுல் காந்திக்கு, அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்துவிட்டார். இந்நிலையில், செவ்வாயன்று மக்களவை கூடிய நிலையில், ராகுல் காந்தி மீண்டும் பேசமுயன்ற போது, அப்போதும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதிக்க வில்லை. இதனால், ஆவேசமடைந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், அவைத் தலைவர் இருக்கை முன்பாக முழக்கங் களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவைத்தலைவர் முன்பு காகிதங்களை கிழித்து வீசி மக்களவையில் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறி, 374-ஆவது பிரிவின் கீழ் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், குர்ஜித்  சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல் மற்றும் டீன் குரியகோஸ் உள்ளிட் டோரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மா னத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றி, 8 எம்.பி.க்களையும் மோடி அரசு சஸ் பெண்ட் செய்துள்ளது. இதனைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்திலேயே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

‘அதிகாரத்திற்கு அடிபணிய மாட்டோம்!’

மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து, சு. வெங்கடேசன் எம்.பி., தமது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.  அதில், ஜனநாயகத்தின் உயிர்நாடியான விவாத மரபை முற்றிலும் சீர்குலைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக தாம் உள்பட 8 உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், “மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க  வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை” எனவும், அந்த வகையில், “தேசப் பாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜக-வின் அதிகாரத்திற்கு அடிபணியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மோடி அரசின் ஜனநாயகப் படுகொலை! சிபிஎம் மாநிலக்குழு கண்டனம்

சு.வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்கள், மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஜனநாயகப் படுகொலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்கள வையில் துவங்கியுள்ள நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கட் கிழமையன்று அவையில் பேச முற்பட்டபோது, ஆளும் கட்சியினர் அவரைப் பேச விடாமல் தடுத்து நிறுத்தினர்.  இரண்டாவது நாளாக, செவ்வாயன்றும் எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து பேச முற்பட்ட போது, அவரைப் பேசவிடாமல் ஆளும் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரைப் பேசுமாறு, சபாநாயகர் அழைத்துள்ளார். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையினை கண்டித்து சபாநாயகர் முன்பு முற்றுகையிட்டு நியாயம் கேட்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்பட 8 எம்.பி.க்கள் இந்தக் கூட்டத் தொடர் முழு வதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளு மன்றத்திற்கு உள்ளேயே எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேசவிடாமல் அவர்களின் குரல்வளையை நெறித்து உரிமைகளை பறித்துள்ளதானது ஜனநாயகப் படுகொலையாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்த ஜனநாயக விரோத அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக எண்ணம் கொண்ட சக்திகள் வலுவாக கண்டன குரலெழுப்பிட வேண்டுமென்றும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும், நாடாளுமன்ற அவையை ஜனநாயகப் பூர்வமாக நடத்திட ஒன்றிய பாஜக முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.