tamilnadu

மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை, நவ. 29- தகவல் தொழில்நுட்பத்தில் மக்களை திறமையானவர்களாக மாற்றுவதற்கான பயிற்சி அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக  தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் கூறியுள்ளார். சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ)  ஏற்பாடு செய்திருந்த “கனெக்ட் 2021’ என்ற தகவல் தொழில்நுட்ப  மாநாட்டில் அவர் பேசியதாவது: – செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற தொழில்நுட்பங்கள் முன்னெப்போதையும் விட வேகமாக வளர்ந்து வருகின்றன. இதன் காரணமாக நமது தொழில்முறை வாழ்க்கையானது மேம்பட்டு வருகிறது. தற்போதுள்ள திறமைகளை வளர்ப்பதற்கான கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு பொருளாதார வாய்ப்பை உருவாக்குவதில் ஒவ்வொரு வணிகத் தலைவரும் நேரடிப் பங்கு வகிக்க முடியும். தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறன்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கும், தொழில்நுட்பத்தில் மக்களை திறமையானவர்களாக மாற்றுவதற்கான பயிற்சி அளிப்பதற்காக தமிழக அரசு தேவையான நடவடிக்கை களை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். மாநிலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவதற்கும், எதிர்காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் இந்த ‘கனெக்ட் 2021’ மாநாடு ஒரு முக்கிய தூணாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார்.  தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் பேசுகையில், இந்த மாநாடு  ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்துகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க  அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றார். இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழகத் தலைவர் டாக்டர் எஸ். சந்திரகுமார்  கேபிஎம்ஜி நிறுவனத்தின்  கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான தேசியத் தலைவர் நாராயணன் உள்பட பலர் இதில் பேசினர்.