tamilnadu

img

மதுரை சிறை கைதிகள் போராட்டம்: 25 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை மத்திய சிறையில் காவல்துறையினருக்கும், கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தொடர்புடைய 25 கைதிகள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


 சிறையின் மதில்சுவர் மீது ஏறி நின்று செவ்வாயன்று கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மத்திய சிறையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் சிறைகளில் கைதிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கூறி காவல்துறையினரை கண்டித்து சிறை கட்டிடத்தின் மேல் தளத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் தங்களை மானபங்கப்படுத்தி கொடுமை செய்வதாக கைதிகள் குற்றம் சாட்டினர். இதனை கண்டித்து கற்களை சாலைகளில் வீசி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமையில் அதிகாரிகள் மற்றும் மேற்கு தாசில்தார் கோபிதாஸ் ஆகியோர் வந்து கைதிகளிடம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. அதை தொடர்ந்து சிறையின் மேற்கூரையில் இருந்த கைதிகள் கீழே இறங்கினர். மற்ற கைதிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றனர். அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.


வழக்குப்பதிவு


இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ், கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.