ஐ.ஓ.சி எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட இடங்களை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட விளைநிலங்களில் ஐ.ஓ.சி எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட இடங்களை இன்று (டிச.11) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அப்பகுதியைச் சார்ந்த மக்கள், ஏற்கனவே இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான வகையில் அரசு இழப்பீடு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினர். மேலும், இத்திட்டத்திற்கு நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயிகளை எந்தவிதமான கட்டாயப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படாமையை உறுதி செய்ய வேண்டும்.
இத்திட்டம்தொடர்பான எந்த இறுதி முடிவும் கிராமசபைகள் மூலமே எடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் சில அரசியல் கட்சியினர் மற்றும் இடைத்தரகர்கள் வைத்து விவசாயிகளை சம்மதிக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கண்டிக்க வேண்டும்.
பெரியாறு ஆற்றோடு காவிரி நதியினை இணைத்து கொட்டாம்பட்டி, நத்தம், சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் பாசன வசதி செய்து தர முயற்சிகள் எடுக்க வேண்டும். போன்ற பல்வேறு கோரிக்கைகளை அப்பகுதி முன்வைத்தனர்.
கொட்டாம்பட்டி பகுதி மக்கள் கூறிய மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் உரிய தலையீடு செய்வதாக சு.வெங்கடேசன் எம்.பி மக்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன், சிபிஎம் மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் , மாவட்டக்குழு உறுப்பினர் அடக்கிவீரணன் மற்றும் தாலுகாகுழு உறுப்பினர் ஜெயராமன், மணவாளன் ஆகியோர் உடனிருந்தனர்.