tamilnadu

img

ஆர்எஸ்எஸ்-பாஜக ஒன்றிய ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம்! மக்களைப் பாதுகாப்போம்

தில்லி சிறப்பு மாநாடு அறைகூவல்

புதுதில்லி, செப்.5- ஆர்எஸ்எஸ்/பாஜக ஒன்றிய ஆட்சியாளர் களிடமிருந்து நாட்டைப் பாதுகாப்போம், மக்களைப் பாது காப்போம் எனக் கோரி திங்களன்று புதுதில்லியில் உள்ள ஸ்டேடியம் கூடத்தில் சிஐடியு-அகில இந்திய விவசாயிகள் சங்கம்-அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் நாடு முழுதுமிருந்து தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆர்எஸ்எஸ்/பாஜக ஒன்றிய ஆட்சியாளர்கள் பின்பற்றும் நவீன தாராளமய, மதவெறி, எதேச்சதிகாரக் கொள்கைகளை முறியடித்திட ஒன்றுபட்டுப் போராடத் திட்டமிட்டுள்ளனர். இச்சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகள் வருமாறு: தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும், ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்திட வேண்டும்.

  1.  ஒப்பந்த முறை ரத்து செய்யப்பட வேண்டும்.
  2.  ராணுவத்தில் அக்னிபாதை திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.
  3.  வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி அனைத்து வேளாண் பொருள்களுக்கும் உற்பத்திச் செலவினம் மற்றும் 50 விழுக்காடு உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.
  4.      ஏழைகள், நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் ஒரு தடவை கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்.
  5.   60 வயது நிறைந்த விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் அளித்திட வேண்டும்.
  6.   லேபர் கோடுகள் (Labour Codes) தொழிலாளர்களுக்குக் கேடு பயக்கும் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்திட வேண்டும்.
  7.  அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு அளித்திட வேண்டும், உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
  8.  மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு 600 ரூபாய் அளித்திட வேண்டும். நிலுவைத்தொகைகளை உடனடியாக அளித்திட வேண்டும்.
  9.  நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் உருவாக்கி அமல்படுத்திட வேண்டும்.
  10.  பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்திட வேண்டும்.
  11.  பொதுத்துறை நிறுவனங்களை விற்று பணமாக்கும் (National Monetisation Pipeline)முறையை கிழித்தெறிந்திட வேண்டும்.
  12.  விலைவாசியைக் கட்டுப்படுத்திட வேண்டும். 
  13.  உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி-வசூலைத் திரும்பப் பெற வேண்டும்.
  14. பெட்ரோல்/டீசல்/மண்ணெண்ணெய்/சமையல் எரிவாயு முதலானவற்றின் மீதான கலால் வரிகளைக் குறைத்திட வேண்டும்.
  15.  பொது விநியோக முறையை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்திட வேண்டும். இதன்கீழ் 14 அத்தியாவசிய உணவுப் பொருள்களை வழங்கிட வேண்டும்.
  16.  வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு உணவு மற்றும் வருமானத்திற்கு உத்தரவாதம் அளித்திட வேண்டும்.
  17.  வன உரிமைகள் சட்டத்தைக் கறாராக அமல்படுத்த வேண்டும். வனவாசிகளை வெளியேற்றக்கூடிய விதத்தில் கொண்டுவரப்பட்டுள்ள வன(பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிகளில் கொண்டுவந்துள்ள திருத்தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும். விளிம்புநிலை மக்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும், சமூக நீதியை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
  18.  அனைவருக்கும் சுகாதார வசதிகள், கல்வி வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
  19.  புதிய கல்விக் கொள்கையை கிழித்தெறிய வேண்டும்.
  20.  அனைவருக்கும் வீட்டு வசதி அளித்திட வேண்டும்.
  21.  பெரும் பணக்காரர்களுக்கு வரி விதித்திட வேண்டும். கார்ப்பரேட் வரியை உயர்த்திட வேண்டும்.
  22.  செல்வ வரியை அறிமுகப்படுத்திட வேண்டும்

இவ்வாறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இக்கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற சிஐடியு, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் அனைத்துக் கிளைகளும் தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் விரிவான அளவில் கோரிக்கைகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

இப்பிரச்சாரங்களை 2022 நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாநில அளவில் 2023 ஜனவரியில் சிறப்பு மாநாடுகள் நடத்திட வேண்டும். துண்டுப்பிரசுரங்கள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், குழுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரப் பயணங்கள் (ஜாதாக்கள்), பேரணிகள் நடத்திட வேண்டும். நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வு நடக்கும்போது தில்லியை நோக்கி மாபெரும் பேரணிக்குத் திட்டமிட வேண்டும். நாட்டைப் பாதுகாத்திட, மக்களைப் பாதுகாத்திட சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மேற்கொண்டுள்ள இந்த அறைகூவலுக்கு நாட்டிலுள்ள அனைத்து முற்போக்கு, ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்று கொண்ட மக்கள் அனைவரும் தங்கள் ஆதரவை அளித்திட வேண்டும் என்றும் சிறப்பு மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது.

;