tamilnadu

img

தோழர் கோடியேரிக்கு கேரளம் பிரியாவிடை

கண்ணூர், அக்.3- செங்கொடி போர்த்திய அன்புத் தலைவர் கோடியேரி  பாலகிருஷ்ணன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராம கிருஷ்ணன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். சிபிஎம் கண்ணூர் மாவட்டக் குழு அலுவலகமான அழிக்கோடன் மன்றத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்புத்தோழருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.  முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடல் அருகே இருந்தனர். ஆளுநர் ஆரிப் முஹம்மது கான், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் அழிக்கோடன் மன்றத்திற்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்தினர். திங்களன்று காலை 11 மணியளவில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களின் உறுப்பினர்கள் மற்றும் உற வினர்கள் முன்னிலையில், அன்புள்ள குடும்பத் தலைவர் கோடியேரி பாலகிருஷ்ணன் அவரது இல்லத்தில் இருந்து பிரியாவிடை பெற்றார். சோகமும் கண்ணீரும் நிரம்பிய துயரக் கடலில் மிதந்த கோடியேரியின் உடல் வீட்டிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகமான அழிக்கோடன் மன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டது. 

இளம்வயதிலேயே கண்ணூர் மாவட்டச் செயலாளராக இருந்து கட்சி மற்றும் அணிகளுக்கு உத்வேகம் அளித்த கோடியேரியை அழிக்கோடன் மன்றத்தில் காத்திருந்த வர்கள் முழக்கங்களுடன் கண்ணீருடன் எதிர்கொண்டார். உடல் கொண்டுவரப்பட்ட வழியில் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி னர். உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற போது, சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நான்கு புறமிருந்தும் மலர்களை வீசிக்கொண்டிருந்தனர். ஊர்வலம் அழிக்கோடன் மந்திரை அடைந்தபோது அப்பகுதி முழு வதும் மக்கள் கடலாக மாறியது. அன்புள்ள தலைவரைப் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். மதியம் இரண்டு மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பிறகு உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வாகனத்துக்கு பின்னால், முதல்வர் பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோர் நடந்து சென்றனர். சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். மாபெரும் தலைவர்கள் உறங்கும் பையாம்பலத்தின் சிவந்த மண்ணில் அன்புத் தலைவர் கோடியேரியை நெருப்பு ஜுவாலைகள் வரவேற்றன. கோடியேரி இனி நினைவுகளில் வாழும் வரலாறு ஆணார்.

தோழர்களின் தோள்களில்…

கண்ணூர் மாவட்டக்குழு அலுவலகமான அழிக்கோடன் மன்றத்தில் இருந்து சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, முதல்வர் பினராயி விஜயன், அரசியல் தலை மைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி, ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடலை தோளில் சுமந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரம் குரல்களில் இருந்து, ‘சாகவில்லை, சாகவில்லை; எங்களின் ஊடே வாழுகின்றாய்’ என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. அப்போது முன்னாள் உள்துறை அமைச்சரான கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு முழு அதிகாரப்பூர்வ மரியாதையுடன் காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். மகன்கள் பினோவும் பினிஷும் தந்தையின் உடலுக்கு தீ மூட்டினர்.

இரங்கல் கூட்டம்

ற்கரையில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமை வகித்தார். சில நிமிடங்கள் பேசிய அவரது நா தழுதழுத்தது. பேச்சை நிறுத்தினார். கண்களில் கண்ணீர் முட்டியது. மொத்தக் கூட்டமும் கண்ணீரில் தத்தளித்தது. பினராயியால் தொடர்ந்து பேச இயலவில்லை. சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், மூத்த தலை வர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, காங்கிரஸ் எம்எல்ஏ சன்னி ஜோசப், சிபிஐ தலைவர் பினோய் விஸ்வம், பாஜக  முன்னாள் மாநிலத் தலைவர் சி.கே.பத்மநாபன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி செவ்வணக்கம் செலுத்தினார். அருகில் பினராயி விஜயன், பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், எம்.ஏ.பேபி, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் உள்ளிட்ட தலைவர்கள்.

 

;