திருப்பூர், ஜூன் 20- ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லிக் கொண்டு அவர் எதிர்த்த பாஜகவுக்கு துணை போவது ஏன் என்று அதிமுகவுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தை, திங்களன்று கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சில புகார்கள் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் அவர் அமைச்சராக இருந்தபோது போக்குவரத்துக் கழகத்தில் ஆள் சேர்ப்புக்கு பணம் வாங்கிய தாக குற்றச்சாட்டு உள்ளது. ஊழல் புகார் இருக்கும்பட்சத்தில் அதை முறையாக விசாரிக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை தட்டிக் கேட்க வேண்டும். அந்தத் தவறை விசாரிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்தப் புகாரை விசாரிக்கவும், அதில் தீர்ப்பு வழங்க வும் நீதிமன்றம் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு எல்லோரையும் கட்டுப்படுத்தும்.
எடப்பாடி பழனிச்சாமி, பாரதிய ஜனதா கட்சிக்கு காவடி தூக்குவதற்கு என்ன காரணம்? அந்தக் கட்சியின் லட்சியம், கொள்கை இவர்களுக்கு ஏற்புடையதா? இந்தப் பக்கம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு, மோடி ஆட்சிக்கு காவடி தூக்குவது ஏன்? அவர்கள் லட்சியமும் உங்கள் லட்சி யமும் ஒன்றா? இல்லை. ஆட்சியில் இருந்த போது செய்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது தானே காரணம்! அமித்ஷாவை பார்ப்பதற்கு ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இரண்டு முன்னாள் முதல்வர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் நேரமில்லை, இப்போது சந்திக்க முடியாது என்று மறுத்து விட்டு செல்கிறார். இது அவர்களுக்கு அவ மானம் இல்லையா? தங்கள் ஊழல் குற்றச்சாட்டு களின் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சோதனை, விசாரணை, வழக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தானே காத்துக் கிடக்கிறார்கள். ஜெயலலிதாவின் வாரிசு என்று இவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என்று சொன்னால் அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேரலாமா? சென்னை மெரினா கடற்கரையில் பல்லா யிரக்கணக்கானவர்கள் மத்தியில் பேசிய ஜெய லலிதா, நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இனி ஒருபோதும் அந்தத் தவறை செய்ய மாட்டேன். பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் அந்தத் தவறு என்று சொன்னார். பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்ன ஜெய லலிதாவின் உண்மையான வாரிசு என்று சொன்னால், அவர்கள் பாஜகவிடம் காத்திருப்ப தற்கு என்ன காரணம்? மோடியா? இந்த லேடியா? என்று சொன்ன ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லிக்கொண்டு பாஜகவுக்கு துணை போவது ஏன்? அமலாக்கத்துறை வழக்கு விசாரணை உங்கள் வீட்டுக்கு வந்து விடக்கூடாது என்பது தானே காரணம்.
குற்றம் செய்தவராக இருந்தால், அந்தக் குற்றத்தை விசாரிக்க ஒரு முறை இருக்கிறது. ஒரு அமைச்சர் என்றும் பார்க்காமல் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அவரது வீட்டில் அடைத்து வைத்து, இரவு 12 மணிக்கு உடனடியாக புறப்பட வேண்டும் என்கின்றனர் அமலாக்கத் துறையினர். எந்த ஒரு மனிதனின் அடிப்படை உரிமையை யும் காவல் துறையோ, அமலாக்கத் துறையோ பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதுதான் எங்கள் நிலை. குற்றச்சாட்டு இருக்கிறது என்பதற்காக யார் மீது வேண்டுமானாலும் நட வடிக்கை எடுக்கலாம் என்றால், அண்ணா மலை மீது கூட நடவடிக்கை எடுக்கலாமே! கோவையில் லூ லூ என்ற மிகப்பெரிய மால் திறக்கப்பட்டுள்ளது. அந்த மால் கட்டு வதற்கு ஒரு செங்கல் வைப்பதற்கு கூட அனு மதிக்க மாட்டோம் என்று சொன்ன அண்ணா மலை, இப்போது வாய்மூடி இருப்பது ஏன்? பல கோடி ரூபாய் அண்ணாமலைக்கு கைமாறி இருக்கிறது என்று பத்திரிகைகளில் எழுதி இருக்கிறார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கலாமா?
பாஜகவில் சேர்ந்தால் ஊழல் போய்விடுமா?
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநி லங்களில் ஊழலே நடக்கவில்லையா? உத்தரப்பிர தேசத்தில் ஊழல் இல்லையா? அவர்கள் ஆட்சி செய்த கர்நாடகாவில், வேறு பல மாநிலங்களில், மராட்டியத்தில், பாண்டிச்சேரி யில் ஊழல் நடக்கவில்லையா? அங்கெல்லாம் ஏன் அமலாக்கத்துறை போகவில்லை? அங்கு போக வேண்டியது தானே? அமலாக்கத்துறை பாஜகவின் இளைஞர் அணி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை ஏராளமான வழக்கு கள் பதிவு செய்துள்ளது. அதில் 95% வழக்கு கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது புனை யப்பட்டிருக்கிறது. நூறு சதவீதம் வழக்கு பதிவு செய்திருப்பார்கள். ஆனால் ஐந்து சதவீதம் என்னவென்றால் முன்பு எதிர்க்கட்சி யாக இருந்து, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர்கள். பாஜகவில் சேர்ந்து விட்டால் ஊழல் இல்லாமல் போய்விடுமா?
ஆகவே அமலாக்கத் துறையை பயன் படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்ட வேண்டாம் என்று தான் நாங்கள் சொல்கிறோம். குற்ற வாளிகளை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் செயல்படவில்லை. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அது முன்கூட்டியே இந்தாண்டு டிசம்பருக்குள் வரலாம் என்று சொல்லப்படுகிறது. பாஜக வுக்கு நிலைமை சரியில்லை என்று ஜோசி யர்கள் சொல்கிறார்களாம். அவர்கள் இந்த ஆண்டு இல்லை, இன்னும் இரண்டு ஆண்டு தள்ளி 2025இல் வைத்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பாமல் இந்திய மக்கள் விட மாட்டார்கள். இது எதிர்க்கட்சிகளின் பிரச்சனை அல்ல. இந்திய மக்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனை. ஏழை எளிய மக்களை நசுக்கி, கார்ப்பரேட் முதலாளிகளை வாழவைக்கும் நாசகார கொள்கைகளில் இருந்து இந்த நாட்டை பாதுகாக்க தான் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காகத்தான் எதிர்க்கட்சியினர் ஒன்றாக சேர்ந்து இருக் கிறோம்.
உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க வேண்டும்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என்று சொல்கிறோம். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆரம்பப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி, செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஆகியவற்றை வரவேற்கிறோம். அதேசமயம் மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். நகராட்சி தூய்மை பணியில் அவுட் சோர்சிங் முறை என்று தனியார் மயப்படுத்துவது, வேலை செய்யும் தூய்மை பணியாளர்களை ஆட்குறைப்பு செய்வது, சம்பளத்தை குறைப்பது ஆகிய வற்றை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
வெளிநாட்டில் இருந்து தொழில் தொடங்க மூலதனத்தை கொண்டு வருவதாக முதலமைச்சர் பயணம் போனால், இங்கு இருக்கும் ஆளுநர் ரவி, தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு மூலதனம் வராது என்று சொல்கிறார். ஒரு மாநிலத்தின் ஆளுநர் அம் மாநில அரசுக்கு எதிராகப் பேசி ஏதாவது ஒரு குழப்பத்தை செய்து கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரை தொழில் வளர்ச்சிக்கு வெளிநாட்டு மூலதனம் வருவதை வேண்டாம் என்று சொல்லவில்லை. பெரிய நிறுவனங்கள் வருவதால் மட்டுமே தொழில் வளம் பாதுகாக்கப்படாது. அதேசமயம் இங்குள்ள உள்நாட்டு தொழில்களை, சிறு, குறு தொழில்களை, பாரம்பரியத் தொழில் களை பாதுகாக்க வேண்டும். அதற்குரிய நட வடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். கேரளாவைப் போல் இங்குள்ள பொதுத்துறை நிறுவனங்களை உயிரூட்டி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். கைத்தறி, விசைத்தறி, இன்ஜினியரிங், பனியன் உள்ளிட்ட தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார்.