அண்ணாமலைக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி
கோயம்புத்தூர், டிச. 2- வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது பாஜக அரசின் கொள்கை களே என்று அண்ணாமலைக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். கோவை காந்திபுரம் சித்தாபுதூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம், கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் வரவேற்புரையாற்றினார். இதில், கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், சு.வெங்கடேசன் எம்பி., மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா உள்ளிட்டோர் உரையாற்றினர். கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவின் மாநில செயலாளராக பொறுப்பேற்றார். இவர், எப்போது என்ன பேசுவார், என்ன உளறுவார் என்பது யாருக்கும் தெரியாது.
குற்றவாளிகளின் கூடாரம்
இன்னும் சொல்லப்போனால், அவர் தனது கட்சியில் சேர்த்து வைத்திருப்பவர்கள் யாரென்று பார்த்தால், காவல் நிலையத்தில் தேடப்படுபவர்கள் என்று வான்டட் லிஸ்டில் உள்ளவர்கள் தான் பாஜகவில் தலைவர்களாக உள்ளனர். இவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது பிடித்த குற்றவாளிகளை விட, பாஜக மாநில தலைவராக ஆன பிறகு இவர் கட்சியில் சேர்த்த குற்றவாளிகளின் பட்டியல்தான் மிகப்பெரியது. பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது. பாஜகவில் உள்ள பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு, வன்முறை குற்றச்சாட்டு, பொது இடங்களை ஆக்கிரமித்த குறறச்சாட்டு, சொத்துக்களை சூறையாடிய குற்றச்சாட்டு என ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கிறது. சமூகவிரோதிகளாக இருப்பவர்கள் பாஜகவில் சேர்ந்ததும் சமூக சேவகர்களாக மாறிவிடுகின்றனர். இந்த அண்ணாமலைதான் கம்யூனிஸ்டுகள் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறுகிறார். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்கள் கம்யூனிஸ்டுகளா அல்லது பாஜகவா என்பதை மேடை போட்டு விவாதிக்க அண்ணாமலை தயாரா? திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் வளர்ச்சிக்கு கம்யூனிஸ்டுகள் தடையாக இருப்பதாக சொல்கிறார். இவர் எல்லாம் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்றே தெரியவில்லை.
அதானி, அம்பானிக்கு கொடுக்கத் திட்டம்
காவிரி டெல்டா பாசன பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு எப்படி தொழிற்சாலைகள் வரும் என்பது கூட அண்ணாமலையின் மூளைக்கு எட்டவில்லை. டெல்டா பகுதியில் நிலத்துக்கு கீழ் இருக்கும் ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க முற்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினார்கள். அதன் விளைவாக காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக உருவானது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அனைத்து கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி உருவாக்கப்பட்ட பகுதியில் தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் என அண்ணாமலை சொல்கிறார். கொஞ்சமும் மூளை இல்லாத பேச்சு. இவருக்கு எழுதிக்கொடுப்பவர் இதுகுறித்து சொல்லவில்லையா? நெற்களஞ்சியமான விவசாய நிலங்களை அழித்து அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அழிப்பதற்கு கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் விடமாட்டோம்.
சிறு, குறு தொழில்களுக்கு பாஜக அரசு என்ன செய்தது?
அதேபோன்று, கோவையில் அண்ணாமலை பேசும்போது, வளர்ச்சிக்கு நடராஜன் எம்பி., தடையாக இருப்பதாக பேசியிருக்கிறார். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு பாஜக அரசு என்ன செய்திருக்கிறது? என்கிற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம். 10 ஆண்டு காலம் மோடி ஆட்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அழிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளின் மொத்த கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சிறுகுறு தொழில்கள் இந்தியாவில் அழிந்து கொண்டிருப்பதற்கு மோடி அரசு தான் காரணம். கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தள்ளுபடி செய்யும் மோடி அரசாங்கம், கோவையில் உள்ள ஒரு சிறு குறு தொழில் முனைவோர் வட்டி கட்டாததால் வீட்டை ஜப்தி செய்து தெருவில் நிறுத்தியது வங்கி நிர்வாகம். இதுகுறித்து கேள்வி எழுப்ப திராணி இருக்கிறதா, அண்ணாமலைக்கும், பாஜகவிற்கும். இந்த வங்கிகளுக்கு தலைமை தாங்குகிற அரசுதானே ஒன்றிய பாஜக அரசு. இந்தியாவில், தமிழ்நாட்டில், கோவையில் சிறுகுறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது ஒன்றிய ஆட்சியின் கேடுகெட்ட கொள்கைதான் காரணம். இதேபோன்று, ஜவுளித்தொழில் இருக்குமா, இருக்காதா என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. காட்டன் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தை மூடி விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதலை நிறுத்திவிட்டு, அம்பானியையும் அதானியையும் கொள்முதல் செய்யச் சொன்னார்கள். இதனால் நூல் விலை பல மடங்கு ஏறி இப்போது, ஜவுளி தொழிலே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஒன்றிய பாஜக அரசுதான்.
நிர்மலா சீதாராமன் விசுவாசம்
பருத்தியை அம்பானி, அதானி கொள்முதல் செய்ய அனுமதிக்க கூடாது. ஒன்றிய அரசே கொள்முதல் செய்து விநியோகிக்கப்பட வேண்டும் என இங்கிருந்த தொழில்முனைவோர் ஒன்று சேர்ந்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தபோது, அதற்கு அவர் அதெல்லாம் முடியாது என அம்பானி, அதானிக்கு தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். சிறு, குறு தொழில்கள் நசிந்து வருகிறது, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இத்தொழில்கள் திணறி வருகிறது. உடனடியாக ஒன்றிய பாஜக அரசு தலையிட வேண்டும். ஜவுளி தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில், பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாதா. யார் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள். தென்மாநிலங்களின் இதயமாக இருக்கிற நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைய காரணமாக இருந்தவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் பி.ராமமூர்த்தி. இந்த வரலாறு தெரியாதவர் அண்ணாமலை.