மதுரை, ஜூலை 11- மதுரையில் தினம்தோறும் மூவாயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறவில்லை. கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் ஜூலை 10-ஆம் தேதி இரண்டு நாட்கள் மட்டுமே சோதனை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சில நாட்களில் மிக மிக குறைந்தளவே சோதனை நடைபெற்றுள்ளது. ஆனால் தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை ஒன்பது சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மதுரை ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் புதியதாக நிறுவப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 462 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகளும், ஒவ்வொரு தாலுகாவிலும் 250 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகளும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 117 ஆக்ஸிஜன் வசதியுள்ள படுக்கைகளும் உள்ளன.
மதுரை தோப்பூர் மருத்துவமனையை தீவிரச் சிகிச்சை மருத்துவமனையாக தயார்ப்படுத்தும் வகைல் 1,000 லிட்டர் லிக்யூடு கொள்ளளவு உள்ள இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர் பெங்களுரிலிருந்து கொண்டு வரப்பட்டு ஆக்ஸிஜன் பைப்லைன் மூலமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4.7.2020 முதல் 10.7.2020 வரை 17,000 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4ஆம் தேதி- 1985, 5-ஆம் தேதி 1,320, 6-ஆம் தேதி 2,093, 7-ஆம் தேதி- 2,095, 8-ஆம் தேதி- 3,053, 9-ஆம் தேதி 3,824, 10-ஆம் தேதி 3,436 என்ற அளவில் பரிசோதனை நடைபெற்றுள்ளது. சில சமயங்களில் முடிவுகள் 9 சதவீதம், 10 சதவீதம், 15 சதவீதம் பாசிடிவ் என வருகிறது. ஆரம்ப நிலையிலே கண்டறிவதால் மருத்துவர்கள் சவாலை எளிதாக எதிர்கொள்ளலாம். மதுரை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றார். இதற்கிடையில் சனிக்கிழமை மதுரையில் 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழப்பு 111 ஆக அதிகரித்துள்ளது.