கூறுகட்டி விக்கப் போறேன்- நான்
நாட்டைவிற்கும் ஏலக் காரன்!
மொத்தம்நூறு பேருக்குதான் இந்த தேசம்!
மத்தநூத்து முப்பதுகோடி பர தேசம்!
(கூறுகட்டி)
மேக்கு இந்தியா ன்னு சொல்லிச் சொல்லி
பேக்கு இந்தியனே வச்சேன் கொள்ளி!
சோக்கு சோக்காநாட்டை குழியில தள்ளி
காக்கும் பொதுத்துறைக்கு வச்சேன் புள்ளி!
தேசபக்தி இது தேசபக்தி -இது
தேசத்தை ஏலம்போடும் தேசபக்தி!
நுரையீரலை வித்து மூச்சுக்காத்து- வாங்கும்
நூதன சாதனை தேசபக்தி!
தேசபக்தி இதுநீ தெரிஞ்சுக்கடா தம்புடு!
சூடம்ஏத்தி என்னைதினம் சுத்தி வந்து கும்பிடு!
(கூறு கட்டி)
உங்கம்மா உங்கப்பாசுட்ட பணியாரம்.
எங்க அம்பானிக்கு எச்சிஊறும்!
நவரத்தி னம்ஆகா பேரைப்பாரும்!
நாகம் நாங்கஅதை விழுங்கப் போறோம்!
வேட்டியத்தான்- நாங்க- உருவிக்கிட்டு- உனக்கு
கோமணத்தை குடுக்குற தேசபக்தி!
கோமணத்தையும்- புடுங்கி -அம்மணம்தந்தா- நீ
ஆதரிக்கணும் என்னை கைகுவிச்சி!
சாமியார்க ளுக்குத்தங்கத் திரு வோடு!
உனக்கும்தான் இருக்குஒடைஞ்ச சட்டி ஓடு!
(கூறு கட்டி)
எலிக்கு பாதுகாப்பு பூனை அல்லவா?
எமன் உங்கள் உசுருக்கு காவல் அல்லவா?
வெட்டுற கையில்கொடு வாளைக் கொடுத்து
வெள்ளாடு குனிவதுதான் தர்மம் அல்லவா?
ஆஹாஹா-இந்த -தேசத்துக்காக- பாரு
அப்படிஓர் ஏற்பாடு நாங்க செய்யுறோம்!
ஆமாம்அப்பா -நம்ம- ராணுவத்திலே- பாரு
அங்கிள்சாம் முதலீடு செய்ய வைக்கிறோம்!
“தேசபக்தி” என்றுஇனி பேரு வச்சியே
என்னைஇனி அழைக்குமடா எங்க கட்சியே!