tamilnadu

img

புரெவியால் கனமழை... முகாம்களில் உள்ள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி உதவி...

மதுரை:
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ‘புரெவி’ புயல் புதன்கிழமை இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடையே இலங்கைக் கடற்கரையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்தது. புரெவி புயல், பாம்பனுக்கு 110 கிலோமீட்டர், குமரிக்கு 310 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயலால் இராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது. புதன்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் 500 நாட்டுப்படகுகள், இதே பகுதியைச் சேர்ந்த 110 விசைப்படகுகள், சுற்றுவட்டார கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த 200 விசைப்படகுகள் என மொத்தம் 810 படகுகள் இங்குள்ள சிட்டப்பாலம் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.வியாழக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி இராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் 70 கி.மீ.,முதல்  75 கி.மீ., வரை வேகத்தில் காற்று வீசியது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மழையும் இடைவிடாது கொட்டிவருகிறது. புரெவி புயலால் சிவகங்கை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.  சென்னை மற்றும் புறநகர்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தனுஷ்கோடி மீனவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழ முண்டம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 41 குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனுஷ்கோடி பகுதியில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு தெற்கு கரையூரிலுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு புயலின்போதும் இந்த 41 குடும்பங்கள் பாதிக்கப்படுவதும் அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு மீண்டும் அவர்கள் தனுஷ்கோடி திரும்புவதும் வாடிக்கையாக உள்ளது. இந்தாண்டும் அதுதான் நடந்துள்ளது. இந்தக் குடும்பங்களுக்கு கடற்கரை கிராமமான ராமகிருஷ்ணாபுரத்தில் இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

தூண்டில் வளைவுகள் அமைக்காததால் சிக்கல்
இதுதவிர இராமேஸ்வரம் பகுதியில் பாம்பன், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, தனுஷ்கோடி மண்டபம் பகுதியில் தோணித்துறை பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுக்கவில்லை. தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தால் படகுகளை இன்னும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்இராமேஸ்வரம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தாலும் தனுஷ்கோடியில்  படகுகளை நிறுத்துவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் கடலுக்குள் தான் படகுகளை நிறுத்த வேண்டியுள்ளது.தனுஷ்கோடியின் வடக்குப்பகுதியில் கடலுக்குள் பாலம் ஒன்று கட்டியுள்ளனர். அந்தப்பாலத்தில் குறிப்பிட்ட அளவிற்கே படகுகளை நிறுத்த முடியும். புயல் மாதிரியான காலங்களில் மீனவர்கள் துயரத்திற்கு உள்ளாகின்றனர்.அதேபோல் தனுஷ்கோடியின் தெற்குப்பகுதியில் “ T” வடிவத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கடல் தண்ணீரால் சேதமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் துண்டிப்பு
இராமேஸ்வரம் தீவில் புதன்கிழமை இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை காலை  வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வியாழக்கிழமை காலை சில பகுதிகளில் அரை மணி நேரம் மட்டுமே மின்சாரம்இருந்துள்ளது. வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிநிலவரப்படி இராமேஸ்வரம் தீவு முழுவதும் மின்சாரம்துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்க்சிஸ்ட் கட்சி உதவி
தனுஷ்கோடியைச் சேர்ந்த 141 பேர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கருணாகரன், கட்சியின் தாலுகாச் செயலாளர் ஜி.சிவா, மணிகண்டன், கார்த்திக், பழனிக்குமார், ஜேம்ஸ் ஜஸ்டின், மீனவர் சங்க நிர்வாகிகள் ஜஸ்டின், கருணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளனர். மழையும் காற்றும் தீவிரமாக இருப்பதால் தங்கச்சிமடம் பகுதியில் மீட்புக்குழுவினர் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.