கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு மக்கள் சீனம் 30 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகளைச் செய்வதாக சீன அரசு தெரிவித்திருக்கிறது. வணிக ரீதியாக அல்லாமல், இந்தத் தடுப்பூசிகளை இலவசமாகவே வழங்குவதாகவும் ஆப்கானிஸ்தானுக்கான சீனத்தூதர் வாங் யு கூறியுள்ளார்.
தங்கள் வாழ்நாளில் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு இளைஞர்கள் ஆளாகி விடக்கூடாது என்ற அடிப்படையில் புதிய கொள்கை ஒன்றை நியூசிலாந்து அரசு வகுத்திருக்கிறது. தடாலடியாக எந்த ஒரு கொள்கையையும் நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று தெரிவித்திருக்கும் அரசு, 2027 ஆம் ஆண்டு முதல் 14 வயதுக்குட்பட்ட யாருக்கும் சிகரெட் விற்பனை செய்யக்கூடாது என்பதை தீவிரமாகக் கடைப்பிடிக்கப் போகிறது. வாங்குவதும், விற்பதும் குற்றம் என்று தனது புதிய கொள்கையில் நியூசிலாந்து கூறியுள்ளது.
தனது சரக்கு சேவையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சில்லரை வணிகர்களைக் கட்டாயப்படுத்தியதற்காக பெரு நிறுவனம் அமேசானுக்கு இத்தாலியின் போட்டி மற்றும் சந்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பு அபராதம் விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை விதிக்கப்படாத அளவுக்கு, அதாவது 128 கோடி டாலர் அபராதம் அமேசான் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருக்கிறது.