tamilnadu

தினந்தோறும் - ராமச்சந்திர வைத்யநாத்

தலையிலே நீரூற்றி
துவட்டாத் துவாலையுடன்
அடுக்களைக்குள் ஓடிவந்து

“கெதியாக உந்தனைக்
கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையா யென்மீதில்
வறுமையை வைத்து நீ
குழப்பமா யிருப்பதேனோ
விதியீது நைந்துநான்
அறியாம லுந்தனைச் 
சதமாக நம்பினேனே” 
விருத்தத்தை முணுமுணுத்து

குக்கரை இறக்கி கடாயை 
ஏற்றி காயைப் போட்டு 
இன்னொரு கையால் லஞ்ச் 
பாக்சில் உப்புமாவை அடைத்து
புளியைக் கரைக்கையில்
டிவியில் சொன்னார்கள் ராம
ராஜ்யம் வந்தாச்சாம்

வயிற்றைக் கலக்கியது
அப்படியே போட்டுவிட்டு
மேசையில் இருந்த 
ஹாண்ட் பாக்கில் பார்த்தேன்
“என்னம்மா தேடறே
நாந்தான் எடுத்துண்டேன் 
வேணுமா?” அலமாரியைத் 
துழாவி தந்ததை எடுத்து
குளியல்அறைக்குள் ஓடினேன்


நெரிசலில் ஏறி
புட்டம் தேய
நாராச ஒலியுடன் 
பயணம் முடிச்சு
பார்வையில் அம்மணமாய்
கைபட்டு கால்பட்டு
உடலெங்கும் கண்பட்டு
இயந்திரத்தோடு 
இயந்திரமாய் மிதிபட்டு

மீண்டும் 
நெரிசலில்
புட்டம் தேய
நாராச ஒலியுடன்
வீட்டிற்குள் வந்தபின்
இனிதினந்தோறும்
தீயிலா குளிக்கணும்
கருகிப் போச்சு
கடாயை இறக்கினேன்.