முக்கொம்பில் உபரி நீர் திறப்பு கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
அரியலூர், ஜூலை 1- திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டூர் அணையிலிருந்து 58,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொறுத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்பதனால், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள், ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம். கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்துகொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகளை விளையாடச் செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.