tamilnadu

சி.பி.எஸ்.இ. கேள்வித்தாளில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் திணிப்பு!

சென்னை, டிச. 14 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:  சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புக்கான ஆங்கில பாட கேள்வித்தாளில், வாசிப்பு உரைநடைப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள பகுதி கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமாகவும், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள பாலின சமத்துவத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும்  அமைந்திருக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. ஆணுக்குப் பெண் நிகர் அல்ல என்று திட்டமிட்டே சொல்லும் பகுதியாக இது உள்ளது. “கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடப்பதன்  மூலமாகவே குழந்தைகளையும், வீட்டில் வேலை செய்பவர்களையும் கீழ்ப்படிய வைக்க முடியும். மனைவியின் விடுதலை (பெண் விடுதலை) குழந்தைகளின் மீதான பெற்றோரின் கட்டுப்பாட்டை சீர்குலைக்கிறது. குடும்பத்துக்குள் உயர்ந்த பீடத்தில் இருந்து ஆணை கீழே இறக்குவதன் மூலம், மனைவியாகவும், தாயாகவும் இருப்பவர் குழந்தைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை இழக்கிறார்” என்பன போன்ற கருத்துக்களை பிரசுரித்து, பெண்ணுக்கும், வீட்டுப் பணி உழைப்பாளிகளுக்கும் எதிரான இந்தப் பிற்போக்கான உள்ளடக்கத்தை ஏற்கும் வகையில் வினாக்களும் அமைந்திருக்கின்றன. இது தற்செயலாக நடந்திருக்க முடியாது. இன்றைய அரசியல் சமூக பண்பாட்டு புறச்சூழலுக்கு தொடர்பில்லாததாகவும் கருத முடியாது.

ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை உயர்த்திப் பிடித்து, பெண்ணின் சுயத்தை மறுதலிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சித்தாந்தம் இதில் பிரதிபலிக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம்,  சங் பரிவாரத் தலைவர்களின்  உரைகள் எழுத்துக்கள் நடவடிக்கைகள், சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசனத்தை திருத்துவதற்கான முயற்சிகள் என்று பல கோணங்களில் பரிமாணங்களில் பெண்ணடிமைத்தன கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன. கடந்த காலத்திலும் பாஜக ஆளும் பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் பெண் சமத்துவத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றன என்பதையும் தற்போதைய நிகழ்வோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த கேள்வித்தாள் அரசமைப்புச் சட்ட விழுமியங்களுக்கு விரோதமானது என குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுதிய கடிதத்தை அடுத்து நச்சுக் கருத்தினை கொண்ட இந்த வினாவைத் திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால் இது போதாது. மாணவர்களின் உளவியலை சமத்துவத்திற்கு எதிராக கட்டமைக்கும் இப்படிப்பட்ட கேள்விகளை தயாரித்தவர்கள், அதை மேற்பார்வை பார்த்தவர்கள் என சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிகரித்து வரும் பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைக்கு இத்தகைய கருத்துக்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன என்ற அடிப்படையிலும் இச்சம்பவத்தை பார்க்கவேண்டும். நவீன சிந்தனைகளை புறம்தள்ளி, பாடத்திட்டத்தின் வழியே பெண்கள் மீது வன்முறையை செலுத்த எடுக்கப்படும் பிற்போக்கு முயற்சிகளை, முற்போக்கு இயக்கங்கள் மௌனமாக பார்த்துக்கொண்டு இருக்காது என எச்சரிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

;