மதுரை/புதுக்கோட்டை, டிச.18- மதுரை மாவட்டத்தில் உள்ள 100 பள்ளிகளில் 200 பள்ளிக் கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலியில் பள்ளிக் கழிப்பறைக் கட்டடம் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்ததன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மாவட்டத்தில் 120 வகுப்பறை கட்டடங்களும் 80 கழிவறைக் கட்டடங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அங்கு மாணவர்கள் செல்லாத வகையில் கண்காணிக்கப்பட்டு வந்தது தற்பொழுது முழுமையாக இடிக்க உத்தரவிட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 259 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளது. இது தொடர்பான பட்டியலை சமர்ப்பித்துள்ளோம் என பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார். இதில், 100 கட்டடங்களை இடிக்க வேண்டு மென ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கட்டடங்களை இடிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறினார். பள்ளிக் கட்டடங்களில் கழிப்பறை வளாகங்கள், சமையலறைகள், வகுப்பறைகள் ஆகியவை அடங்கும்.