tamilnadu

நாவரசு கொலை குற்றவாளியை விடுதலை செய்ய நீதிமன்றம் மறுப்பு

சென்னை,மார்ச் 15- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற  ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர்  நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி யின் மகன் நாவரசு. அண்ணாமலை பல்க லைக் கழகத்தின் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந் நிலையில் 1996ஆம் ஆண்டு  கொலை செய்யப்பட்டார்.  இது  தொடர்பான புகாரை விசாரித்த அண்ணா மலை நகர் காவல் நிலையத்தினர் அதே கல்லூரியில் படித்த மூத்த மாணவர் ஜான்  டேவிட்டை கைது செய்து, அவர் மீது கொலை  வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம்  இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜான் டேவிட் தாக்கல்  செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றச்சாட்டு கள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வில்லை எனக் கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.  இதையடுத்து, தலைமறை வாக இருந்த  ஜான் டேவிட்  சரணடைந்த நிலையில்  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது மகனை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரி ஜான்  டேவிட்டின் தாய் எஸ்தர் தமிழக அரசிடம்  முறையிட்டார். இந்த மனு நிராகரிக்கப் பட்டதை எதிர்த்து எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜான் டேவிட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது புழல்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டுக்கு சிறை நிர்வாகம் நற்சான்றிதழ் தந்துள்ளதாகவும், தருமபுரி பேருந்து எரிப்பு, மேலவளவு கொலை போன்ற கொடூர மான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில்,  தனக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ள தாக வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில், முன் கூட்டியே விடுதலை என்பதை உரிமையாக கோர  முடியாது என்றும், இது அரசின் அதிகாரத் திற்குட்பட்டது என்றும், மற்றவர்களை விடுதலை செய்துள்ளதால் அதே வாய்ப்பை தனக்கும் வழங்க வேண்டும் என்று கோர முடியாது என்று வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் உத்தரவில் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.