சிவகாசி, அக்.2- விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் துவங்கியதன் நூற்றாண்டு விழா (1923-2023) நடைபெற்றது. சிஐடியு சார்பில் சிவகாசி பாவடித் தோப்பில் நடைபெற்ற விழாவிற்கு தீப்பெட்டி-பட்டாசு தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.என்.தேவா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். வரவேற்புக்குழு செயலாளர் கே.முருகன் வரவேற்புரை யாற்றினார். சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி ஆகியோர் விளக்கிப் பேசினர். நூற்றாண்டு விழா சிறப்பு மலரை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் கே.சண்முகம் எழுதிய “இருளை மறைக்கும் ஒளி“ என்ற நூலை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வெளியிட சிபிஎம் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர், மாநகராட்சி மேயர் ஐ.சங்கீதா இன்பம், துணை மேயர் கே.விக்னேஷ் பிரியா காளிராஜன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் எம்.ஜெபஜோதி நன்றி கூறினார். மேலும் இவ்விழாவில் மாவட்ட துணைத் தலைவர்கள் கே.விஜயகுமார், எம்.பிச்சைக்கனி, கே.கண்ணன், எம்.பால கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஏ.சீனிவாசன், எஸ்.மனோஜ்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக மின்னல் முத்துராமனின் விழிப்புணர்வு பாடல்கள், கல்லூரி மாணவ, மாணவிகளின் பறை இசை, மணிமாற பூபதியின் பலகுரல் நிகழ்ச்சி ஆகியவை நடை பெற்றது. இதில் விருதுநகர் மாவட்டம் முழுவதுமிருந்து ஏராள மான பட்டாசுத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
100 ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் பட்டாசுத் தொழில் செழித்து வளர வேண்டும்
பெருமிதத்துடன் வாழ்த்திய அ.சவுந்தரராசன்
விழாவில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது: இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஏராளமான கைவினைத் தொழில்கள் இருந்தன. கை நெசவுத் தொழில் அதிக அளவில் இருந்தது. அப்போது ‘டாக்கா மஸ்லித்’ என்ற துணி மிகவும் பிரபலமானது. அதை ஒரு மோதிரத்திற்குள் வைத்துக் கொள்ளும் அளவுக்கு மிகவும் நுட்பமாக தொழில்நுட்பம் கொண்டது. இந்நிலையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இங்குள்ள தொழில்களை அழிக்கும் நோக்கில் லண்டனில் இருந்து துணிகளை இறக்குமதி செய்தது. மேலும், பருத்தியை இந்தியாவி லிருந்து கொண்டு போய் அதை துணியாக்கி இங்கு வந்து விற்பனை செய்தனர். இதன் காரணமாக, இந்தியா வில் உள்ள நெசவுத் தொழில் பாதிக்கப் பட்டது. ஏராளமானோர் தொழில்களை இழந்து வறுமை, பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டது. இதனால், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்தது. முதல் உலக யுத்தம் முடிந்த பின்பு, லட்சக்கணக்கானோர் தொழிலை இழந்து கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் பட்டாசுத் தொழில் படிப்படியாக வளர்ந்து வருகிறது. சில தொழில்களை பிரத்யேகமாக அதன் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அங்கு மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. அந்த வகை யில், பட்டாசுத் தொழில் இப்பகுதிக்கு ஏற்றத் தொழிலாக உள்ளது.
இந்நிலையில், தொழில்களை அழிக்கும் நோக்கில் வழக்கு தொடர்வதற் காகவே சிலர் உள்ளனர். வழக்குத் தொடர்ந்ததும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்குகிறது. இந்தியாவில் உள்ள இளை ஞர் களுக்கு வேலையில்லை என வழக்கு தொடர்ந்தால் அனைவருக்கும் உச்ச நீதி மன்றத்தால் வேலை வழங்கிட முடியுமா? நீதிமன்றங்கள் ஒரு தீர்ப்பை வழங்கு வதற்கு முன்பு அதனால் வரும் பாதிப்பு என்ன? என்பதை பார்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கத் தடை விதித்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். 8 லட்சம் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க என்ன வழி என்பதையும் நீதி மன்றங்கள் சேர்த்தே குறிப்பிட வேண்டும். எனவே, இத்தீர்ப்பை ஆட்சேபிக் கிறோம். தடைசெய்வதற்கு பதிலாக அதை முறைப்படுத்தலாம். சில வழிகாட்டுதல் களை வழங்கலாம்.
இந்தியாவில் ஓடும் 2 கோடி வாகனங் களால் ஏற்படும் புகையால் ஒவ்வொரு நொடியும் காற்று மாசுபடுகிறது. இதை தடுக்க, என்ஜின் உற்பத்தியில் மாற்றம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஒரு தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டுமே தவிர ஒழித்துக் கட்டக் கூடாது. வறுமை யை விரட்டியடிப்பதே உச்சநீதிமன்றத் தின் வேலையாக இருக்க வேண்டும்.நீதி மன்றங்களால் ஒழிக்க வேண்டியவை ஏராளமாய் உள்ளது. குறிப்பாக பெண் களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை ஒழிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு அனுமதி மறுக்கும் ஒன்றிய அரசு 100 ஆண்டுகளைக் கடந்து பட்டாசுத் தொழில் நிலைத்து நிற்பது மிகப் பெரு மை வாய்ந்த வரலாறாகும். இத்தொழில் செழித்து வளர வேண்டும். நமது பட்டாசு கள் ஆப்பிரிக்கா கண்டம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. ஒன்றிய அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. தமிழகத்தில் தற்போது ஜவுளித் தொழிலை பாதுகாக்க வேலை நிறுத்தம் செய்து உற்பத்தியாளர்கள் போராடி வருகின்றனர். திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு, பண மதிப்பு நீக்கம் போன்ற கொள்கைகளால் இந்தியாவில் உள்ள அனைத்து சிறு, குறு தொழில்களும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் சேமிக்கும் பழக்கம் அதிகமாக இருந்த இந்தியாவில் தற்போது குறைந்து வருகிறது. அதற்கு காரணம் மக்களிடம் சேமிக்க பணம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.